பதிமூன்றுமோதிரங்கள், இரா. செந்தில்குமார்

விருதுக்கு வாழ்த்துக்கள். பதிமூன்று மோதிரங்கள் தொகுப்பை இது மட்டும் மூன்று முறை படித்திருப்பேன். கடிதம் எழுத வேண்டுமென நினைத்து தள்ளிப்போட்டு கொண்டிருந்தேன். இவ்வருடம் சில பல பயணங்கள் , அதெற்கென சில மெனக்கெடல்கள் என காலம் மிக வேகமாக ஒடிக்கொண்டிருந்தது. இன்று எல்லாவற்றையும் தள்ளி வைத்து விட்டு இக்கடிதத்தை ஆரம்பிக்கிறேன்.   எம். கோபலகிருஷ்னன் எழுதிய “உலகெலாம் ஒருவனெ” மிகப்பொருத்தமான முன்னுரை. இனமென, மொழியென, கலாச்சாரமென மனிதனை தனித்துவப்படுத்த பல காரணீகள் இருப்பினும், அவனுள் உலவும் பொதுத்தன்மைகளை அடையாளம் கானுமிடத்திலே இலக்கியம் உருவாகிறது என நான் நம்புகிறேன். என்னை பாதித்த கதைகளின் வரிசயில் ஒவ்வொரு கதை பற்றியும் சொல்லி செல்கிறேன். 

முதலில் “நிவிக்குட்டியின் டெடிபியர்”. மிகச்சாதரனமாக டோக்கியோவின் ஒரு சராசரி இந்திய குடும்பச் சூழலில் ஆரம்பித்து இன்றைய இந்தியச்சமூகத்தின் நடு வயதுகாரர்கள் சந்திக்கும் உளவியல் சிக்கலில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறீர்கள். மிகச்சாதரனமாக தோன்றும் கதை ஆனால் உளவியல் ரீதியாக மிக ஆழமான கதை. சதாசர்வகாலம் தன்னை நிருபித்து கொண்டே இருக்க வேண்டிய அழுத்தம் நிறைந்த இக்காலச் சமூகத்தில், இது போன்ற பித்து சாதாரணம் தான். நிறைய பேரை இது போல் பார்த்துள்ளேன், ஏன் நானே கூட இதுபோன்ற பித்து நிலையில் இருந்து இருக்கிறேன். என்னால் எல்லாம் முடியுமென மனிதன் தருக்கி அறைகூவும் வேலையில் , அவ்வளவு சுலபமில்லை என இயற்கை அமைதியாக இருக்கும். இது மனிதனின் அகத்தில் எழும் அறைகூவல், வெளியே சொல்லி புரியவைக்கமுடியாத அகக்குரல். மகாபாரதத்தில் தருமனை சூதாட வைத்ததும் இந்தக் குரல் தான். குழந்தையை அடிக்கும் அளவுக்கு நரேனை தள்ளுவதும் இந்தக் குரலே.

இந்திர தேசம் கதையில் என்னை ஈர்த்தவர் கிமுரா சான். ஜப்பானியர்களுகே உரிய கூரிய நுன்னுனர்வும், அகத்தில் தோன்றுவதை மிகச்சரியான வார்த்தைகளால் வெளிப்படுத்தும் தன்மை கொண்டவர். சுற்றிலும் அமர்ந்திருக்கும் மிகை அலங்கார மாதுகளை இறந்த சாமுராய்களின் அலங்கரிக்கப்பட்ட தலைகளுடன் ஒப்பிட ஜப்பான்காரர்களால் மட்டுமே முடியும். மிகக்கூரிய ஒப்பீடு. இறந்த சாமுராய்களின் தலைக்கு ஒரு மதிப்பு இருந்திருக்கிறது. அதை அலங்கரித்து வெற்றி பெற்ற சாமுராயின் பார்வைக்கு வைக்கிறார்கள். சமீபத்தில் வெளிவந்த தகெஷி கிடானொ அவர்கள் இயக்கி நடித்த “குபி” திரைப்படத்தில் இக்காட்சிகளை பார்க்க முடியும். Manga , Anime , Taiga Drama என சாமுராய் வரலாறு திரும்ப திரும்ப இம்மக்களுக்கு பரிச்சய படுத்த பட்டுள்ளது .  ஆகையால் இதுபோன்ற பல சாமுராய்கால நடைமுறைகள் இன்றும் இம்மக்களின் மனதில் பதிந்திருக்கிறது. அதை சரியாக இக்கதையில் கொண்டு வந்திருக்கிறீர்கள். நுனுக்கமான விவரனைகள் உடைய நிறைவான கதை.

“அழகிய சாளரங்களையுடைய வீடு” – இதுவும் ஜப்பானியர்களின் யோசிக்கும் ஆழத்தை புரிந்து கொள்ள உதவும் ஒரு கதை. இந்தியாவில் இருந்து படிப்பவர்களுக்கு ஒரு வீடு வாங்க இவ்ளோளாமாடா யோசிப்பிங்க என தோன்றும், ஆனால் இங்கு வாழ்பவர்களால் இதை புரிந்து கொள்ள முடியுமென தோன்றுகிறது. ஒருமுறை ரயில் பயனத்தில் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஜப்பானிய பாட்டிகள் , ஒன்றரை மணி நேரமாக தான் வாங்கிய காபியின் ருசியில் ஆரம்பித்து அந்த காபி கொட்டை எவ்வாறு பயிரிடப்படுகிறது என்பது வரை பேசிக்கொண்டே வந்தது நினைவிற்கு வந்தது. எளிய நிகழ்வுகளில் கூட இவர்களுக்கு நுன்னிய விவரம் வேண்டும். வாழ்க்கை இவர்களுக்கு ஒரு புதிர் போல, எப்பொழுதும் புதிர்களுக்கு விடை தேடிக்கொண்டேயிருக்கிறார்கள். ஒரு சராசரி இந்திய மனம் இதை “Overthinking” என்றும் “Delaying  to Decide ” என்றும் அடையாளபடுத்திவிட்டு கடந்து போய்விடும், ஆனால் இது ஜப்பானிய பன்பாட்டின் அங்கம். ஜப்பானிய சமூக பன்பாட்டின் ஒரு சித்திரத்தை விவரித்து இருக்கும் வகையில் இக்கதை முக்கியமானது.  

“உருதுயர்” – மதுரை பெஸ்ட் முனியாண்டி விலாஸ் – பெரிய சாலையின் அருகில் சின்ன சந்தில் எந்த சலனமும் இல்லாத ஒரு கடையும் , இக்கதையில் வருவது போன்றே ஒரு ஓனரும் எல்லா ஊரிலும் இருப்பார்கள் . இந்த கடை , அது அமைந்த தெரு என உங்கள் விவரணை அருமையாக இருந்தது . ஒரு படிமம் போல இந்த கடை என்னுள் படிந்து விட்டது . சென்னையிலும் சரி, ஜப்பானிலும் இது போன்ற நிறைய கடைகள் பார்த்திருக்கிறேன். இனி  நான் செல்லும் ஊர்களிளெல்லாம் இது போன்ற ஒரு கடையை தேடிக்கொண்டே இருப்பேன் என தோன்றுகிறது . மொத்த சமூகமும் புதுசாக மாறிக்கொண்டிருக்கையில் பழைய பாணியிலே வியாபாரம் செய்பவர்கள் ஆசீர்வதிக்க பட்டவர்கள் , அவர்களுக்கெனவே ஒரு வாடிக்கையாளர்கள் கூட்டம் எப்பொழுதும் உண்டு

அய்லீன் – ஏமாற்றுபவர்களின் நடிப்பும் முகபாவனைகளும் மிக அழகாக இந்த கதையில் வந்துள்ளது. 17 வயதில் “சேல்ஸ் பாய் தேவை” என்ற விளம்பரம் பார்த்துவிட்டு  சென்றால் அங்கே அமேசான் காட்டின் அரிய வகை மூலிகையால் செய்த ஒரு மாத்திரையை விற்பது பற்றி கிளாஸ் எடுத்து கொண்டிருந்தார்கள் . சற்று நேரம் கடந்த பின்னே தெரிந்தது அது MLM வகை விற்பனை என. அங்கே வேலை செய்த பெண் என் பெயரை பல முறை சொல்லி கூப்பிட்டு என்னையும் அவளது அணியில்  சேரும்படி மூளை சலவை செய்து கொண்டிருந்தாள் . 17 வயதில் ஒரு பெண் நம்  பேரை சொல்லி கூப்பிடுவது மிகவும் குதூகலமாக இருந்தது சேர்ந்து விட வேண்டும் என்றே முடிவு செய்து இருந்தேன் . அன்று MLM பற்றிய விழிப்புணர்வெல்லாம் அவ்வளவு இல்லை . விற்பனையை தொடங்க என்னிடமே சிறு தொகை கேட்டனர் , அந்த தொகையை கட்ட முடியாமல் சேராமல் விட்டு விட்டேன். நான் சேர மாட்டேன் என தெரிந்தபின்னும் , அந்த பெண் ஒரு சிறிய கட்டி பிடித்தலுடன் எனக்கு விடை கொடுத்தாள். அந்த உணர்வுகள் பற்றி ஒரு சிறுகதையே எழுதலாம். இது நடந்தது 2006 வாக்கில். அப்பிடியே கட் பண்ணி 2023 ,Instagramல் ஒரு ஜப்பானிய  பெண்ணிடமிருந்து  மெசேஜ் “உங்கள் Instagram பார்த்து நீங்கள் ஒரு நல்ல பயணி என அறிந்தோம். நாங்கள்  இந்தியாவில் எங்கள் வணிகத்தை விரிவாக்கம் செய்ய இருக்கிறோம் , எங்களுக்கு சில ஆலோசனைகள் வழங்க முடியுமா என ” . நம்ம ஒரு ஆளுனு நம்ம கிட்ட ஆலோசனை எல்லாம் கேட்கிறார்களே என சந்திக்க முடிவு செய்தேன். எங்க பாஸ் உங்களை சந்திக்க ஆசை படுகிறார் ஆனால் அவர் ரொம்ப பிஸி ஆகையால் ஜும் மீட்டிங் வழியாக உங்களை சந்திப்பார் என சொல்லப்பட்டது. அப்பவே எனக்கு ஒரு பொறி தட்டியது , சென்று பார்த்தால் இதுவும் MLM. இம்முறை ஏதோ ஒரு அழகு சாதன மாத்திரை தான் விற்பனை பொருள். இங்குள்ள ஜப்பானியர்களுக்கு கீழ் இந்தியர்களை சேர்த்து , அந்த இந்தியர்கள் மூலமாக பல இந்தியர்களை சேர்த்து , லாபத்தை பெருக்கலாமென  திட்டம் போட்டிருக்கிறார்கள். அதற்கு முதல் இந்தியனாக நான் இருக்க வேண்டுமாம் , நீங்கள் சேர்ந்தால் மட்டும் போதும் உங்களை கோடீஸ்வரனாக்கி காட்டுகிறோம் என்றார்கள். குடித்த காபிக்கு காசு கொடுத்து விட்டு விட்டா போதும் என ஓடி வந்தேன். இந்தக்கதையில் வருவது போலவே அதே குருப் இன்னொரு இந்திய நண்பருக்கு வலை விரித்து கொண்டிருந்ததை பார்க்க நேர்ந்தது , பாவம் அவர் என்ன சொல்லி தப்பி வந்தாரோ. இந்தக்கதை இந்த நினைவுகளை அப்படியே திரும்ப கொண்டு வந்து விட்டது. ஒரு ஏமாற்று வேலை எனும் கதைக்குள் அய்லீன் கதாப்பாத்திரமும், அந்த காதலும் ஒரு அழகு கலப்பு. 

பதிமூன்று மோதிரங்கள் – ஜப்பானில் உள்ள புலம்பெயர் இந்தியர்களில் அதிகம் கவனிக்க படாதவர்கள் உணவகங்களில் வேலை பார்ப்பவர்கள். அசாத்தியமான உடலுழைப்பு தேவையான இந்த வேலையில் கணிசமான பேர் இருக்கிறார்கள் , அவர்களை பற்றி பேசிய வகையில் இந்தக்கதை முக்கியத்துவம் வாய்ந்தது. உணவகத்தில் வேலை செய்யும் இந்தியரின் உடலுழைப்பு பற்றி பேசும் கதையில் , ஜப்பானின் Convenience Store இல் அதே அளவு உழைக்கும் பெண்ணின் கதையும் வருவது நல்ல இனைவு. Convenience Store இல் உட்கார இருக்கை இருக்காது என்பது நீங்கள் சொன்ன பின்பே நான் உணர்ந்தேன். கதையின் கடைசி வரியை படித்த போது அந்த புகைபடங்கள் பாண்டியனை போய் சேர வேண்டுமென வேண்டிக்கொண்டேன் . 

பெட்டகங்கள், வஸ்திராபகரணம், களவு  – சென்ற தொகுப்பின் கடிதத்திலும் சொல்லியிருந்தேன் வாழ்ந்து கெட்ட கதைகள் உங்களுக்கு இயல்பாக வருகிறது என. வாழ்வின் ஒவ்வொரு பகுதிகளையும் சுருக்கமாக சில சம்பவங்களாக சொல்லி , கதாபத்திரத்தின் நீண்ட வாழ்வை எளிதாக புரிய வைக்கிறீர்கள். இது ஒரு நல்ல கதை சொல்லும் உத்தி. பெட்டகங்கள் கதையில் வரும் இரண்டு அன்னப்பறவை வைத்த டாலர் செயின் அக்காலத்தின் தவிர்க்க முடியாத பேஷன் . என் அம்மாவும் சித்திகளும் அவற்றை வைத்து இருந்தார்கள். களவு கதையை குறும்படமாக எடுக்கலாம் , டேனி கதாப்பத்திரத்துக்கு யாரை போடலாம் என்பது வரை என் மனம் யோசித்து கொண்டிருந்தது.  

நிறைவான தொகுப்பு. சென்ற முறையும் சொன்னது போல உங்கள் கதைகளை படிக்கும் போது எனக்கும் எழுத வேண்டுமென தோன்றும் ஆனால் ஆரம்பிக்க தேவையான தைரியம் இன்னும் வரவில்லை . முயற்சி செய்கிறேன். 

என்றென்றும் ரசிகனாய் அன்புடன் 

முத்து 

2024/08/21

Discover more from வேடிக்கை பார்ப்பவன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading