அன்பு அஜி
நலம் விழைகிறேன். ஜப்பானிலிருந்து முத்து எழுதுகிறேன். அமெரிக்காவில் “வாழும் தமிழ்” விழா சிறப்பாக நடைபெற்றதை ஜெ தளம் மூலம் அறிந்தேன். சாத்தியமாக்கி காட்டிய அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.
உங்கள் மருபூமி சிறுகதை தொகுப்பின் வாசிப்பனுபவங்களை பகிர்ந்து கொள்கிறேன். போர்க் ரோஸ்ட் மற்றும் முடியாட்டம் கதைகள் ஏற்கனவே இணையத்தில் படித்தவை . இந்த நூலை வாங்கியதே முடியாட்டம் கதைக்காக தான். முடியாட்டம் போன்ற ஒரு கதை வெளிவந்த நூலை கையில் வைத்திருக்க வேண்டுமென நினைத்தேன். நங்கேலி மிக எளிதாக கணவுகளுக்குள் படிமமாகி விடக்கூடிய கதாபாத்திரம் . இக்கதையை படிக்கையில் நங்கேலியின் கண்கள் மட்டும் ஒரு உருவம் போலவே என்னுடன் பயணிப்பதாக ஒரு உணர்வு. நங்கேலியின் கண்களின் தீவிரத்தினூடாகவே கதை பயணிப்பதாக எனக்கு பட்டது. ஒவ்வொரு சூழலிலும் ஒவ்வொரு உணர்ச்சி .தம்புரானை முதலில் பார்க்கும் போது ஏளனப் பார்வை, “உவன் என்ன தொட்டில்லம்மா” என்று சொல்லும் பொது ஒரு வகையான மிரட்சி நிறைந்த கண்கள். “அவை வெறும் சருகு குப்பைகளடா ” என்று கணவனிடம் சொல்லும் போது காதல் மட்டுமே நிறைந்த கண்கள் . புணர்வின் உச்சம் வெளிப்படும் ஒரு கண். “ஆரிஞ்ஞடடா தலையே” என சொல்லும் போது பேய் போல விதிர்த்த ஒரு கண். கடைசியாக அரிந்து விழுந்த தலையில் அப்பேய் விழி நகைப்புடன் நிலை கொள்கிறது. “கரிய வைரம் போன்ற பெண் , தோள்புரண்ட விரிகூந்தலுடன் ஒரு வன தெய்வத்தை போல” என ஒரு விவரிப்பு வரும். வன தேவதை என்ற சொல்லே நங்கேலியை ஒரு படிமமாக நிலை நிறுத்திவிடுகிறது. நங்கேலியின் கதையை படித்து முடித்த பின் ஒரு ஆசுவாசம் வந்து திரும்ப அந்த சிறுபெண்ணின் முடியாட்டத்தில் மனம் ஒரு வகை தீவிர உணர்வுக்கு ஆட்படுகிறது. அது வரை படித்த கதையின் வலியை முடியாட்டம் எனும் கலை திரும்ப கொண்டு வருவதாக இருந்தது. கலையே பெருவலிகளை காலங்கள் தோறும் கடத்தும் கருவி என்பதே இக்கதையின் மூலம் நான் உணர்ந்தது.
மருபூமி , கதையை படித்து முடித்தவுடன் வெறுமை என்ற ஒரு சொல்லே என்னுள் நிலை கொண்டது. சூழல் தரும் அழுத்தங்களால் உடல் ரீதியான கடுமையான தவிப்பில் இருக்கும் ஒருவன் தன் மனதவிப்புகளை பற்றி பேசுகிறான். ஒரு பித்தன் போல , சில சமயம் ஞானி போல. இன்றைய வாழ்க்கையை மிகச்சிறியதாக உணர வைக்க கூடிய பெரும் கதையாளன் ஒருவனின் பயணம். தமிழில் வாசிப்பவர்களுக்கு எழுத்தாளர் பஷீரீன் முகம் பரிச்சயமானது. பெரிய கண்ணாடியும் அதை தாங்கி பிடிக்க அதை விட பெரிய மூக்கும் சிறிய மீசையுமென பஷீர் அவர்களின் ஓவியம் அவரது சில நூல்களின் அட்டை படமாக வந்து, என மனதில் தங்கியவை. அந்த முகத்தில் விதவிதமான உணர்வுகளுடன் அவரே கதை சொல்வது போலவே இருந்தது. இந்தக் கதையை படிக்கும் போது மனித நடமாட்டம் குறைந்த ஒரு அரை பாலை நிலத்தில் தங்கி இருந்தேன். அறையில் இருந்து வெளி வந்து பார்த்ததால் விண்மீன்கள் மிக அருகிலென தெரியும் வானம். இரவு நேர வானம் தருவித்த தனிமையில் மிக சிறியதாக என்னை உருவகித்து கொண்டிருந்த தருணம் , இக்கதை என்னை மேலும் சிறு அணுவாக சுருக்கியது. இக்கதை சொல்லும் பயணம் வாழ்வின் ஒரு தரிசனம் போல பட்டது. வாழ்வின் மாறிக்கொண்டே இருக்கும் தன்மையாக பாலையின் மணல் வெளியையும், மாறாத்தன்மை கொண்டதாக அம்மரத்தையும் உருவகபடுத்தி கொண்டேன். அம்மரத்தை பார்த்து பஷீர் சொல்வதாக வரும் வரி “இவ்வுலகதில் எங்கு நான் இறந்து புதைக்கபட்டாலும் உன் வேர்கள் அங்கு வந்து என்னை தழுவி கொள்ளட்டும்”. மானுடம் மாறாதது ஒன்றை தேடி அதை இறையென பாவித்து அதில் தன்னை பிணைத்து கொள்ள வேண்டுமென போராடிக் கொண்டே உள்ளது போல தோன்றியது. இனி ஒன்றுமில்லை என முற்றாக சரணடையும் தருணங்கள் முழுதளிப்பாக மாறி வெளிச்சத்தை நோக்கி செல்லும் பயணம். இவ்வெளிச்சத்திற்காகவே இக்கதை நினைவு கூறப்படும்.
ஆயிரத்து முந்நூற்றுப்பதினான்கு கப்பல்கள் , பால்ய கால நினைவு போல கடந்து சென்றாலும் இக்கதை இலக்கியமாகும் இடம் என நான் நினைப்பது அந்த சிறுவன் ஒவ்வொரு எல்லைகளை கண்டு திடுக்கிடுவதும், ஏதோ ஒன்றால் அவன் அதை தாண்டி வருவதும் தான். தனிப்பட்ட முறையில் எனக்கு பிடித்த பகுதி பள்ளிக்கூட பகுதிகள் தான். . நமது பொது கல்வி திட்டம் ஒரு பெரும் முயற்சி . அனைவருக்கும் கல்வி என்பது பல்வேறு நல்லுளங்களின் கொடை. பெரும் முயற்சி என்பதாலே அனைத்து மாணவர்களும் படித்த்த்த்த்த்தே தீர வேண்டுமென எதிர்ப்பார்க்கும்!!. எல்லோருக்கும் ஒரே அளவுகோல்களை போடும். அதை தாண்ட முடியாதவர்களை இரக்கமின்றி ஒதுக்கி தள்ளும். எதற்கும் லாயக்கிலாதவர்களாய் முத்திரை குத்தும். இதிலிருந்து மேலேறி வருவதற்கான எந்த நம்பிக்கையையும் அளிக்காமல் பார்த்து கொள்ளும். இன்றும் இதை பற்றி நிறைய பேசுகிறோமே தவிர நிறுவன அளவில் எந்த மாற்றமும் வந்தது போல தெரியவில்லை. வளர்ந்த நாடுகள் இதை தீவிரமாக விவாதித்து பள்ளிக்கல்வியின் அடிப்படைகளை மாற்றி கொண்டிருக்கின்றன. வெறும் மனப்பாடம் மட்டுமில்லாது ஒரு மாணவரின் பலம் பலவீனத்தை பொறுத்து பாடத்திட்டங்களை தேர்ந்து எடுத்து கொள்ளும் முறை உள்ளது. இக்கதை இந்த பின்னணியை மிகச்சாதரணமாக எவ்வித கழிவிறக்கமும் இல்லாமல் பேசி செல்கிறது. கதையில் வரும் அஜிதனுக்கு ஒரே நம்பிக்கை பாப்பா தான். விரும்பிய நாய் இறந்து போனதை சட்டை செய்யாமல் இயல்பாக கடந்து போகும் பாப்பாவிடம் இருந்து அஜிதன் அடுத்த கட்டதை நோக்கி எழுவதாக எனக்கு பட்டது.
போர்க் ரோஸ்ட் , மிக விருப்பமான கதை. பொதுவாகவே சமையல் மற்றும் சாப்பிடும் நேர்த்தியை சொல்லும் கதைகள் எனக்கு மிக பிடித்தமானவை . நெடுநாட்கள் மனதில் நிலைத்துவிடுவதுண்டு. ஜோஸ் சமையல் முடித்து விட்டு தியானம் போல பெருமூச்சி விடுமிடம் ஒரு தேர்ந்த கலைஞன் வெளிப்படும் இடம். “போர்க்குக்கு ஒன்லி பெப்பர் தான் பாத்துக்க, இது தனி இனமாக்கும்” , இவையெல்லாம் கலைஞர்கள் மட்டுமே உணரக்கூடிய நுணுக்கங்கள். ஜோஸ் கதாபாத்திரம் எந்த வேலையையும் முன்பே யோசித்து வைத்தது போல அநாயசமாக செயல் படுத்துகிறான். ஏன் அந்த ஆச்சி போர்க் ரோஸ்ட் கேட்கிறாள் என்று கூட அவனுக்கு தெரிந்திருக்கிறது. இத்தொகுப்பின் இனிமையான கதை.
ஜஸ்டினும் நியாயத்தீர்ப்பும் கதை இயேசு பிதாவிற்கு கொடுத்த உருவ வடிவம் சுவாரசியமானது. புனைவுகள் தரும் பேரின்பம் என்பது சில எளிய விவரிப்புகளால் நாம் மனதில் ஒரு உருவ வடிவத்தை உருவாக்கி விட முடிவது தான்.”போல உள்ள , அழுவுகாம் பாரு” என்று இயேசு பிதா சொல்லுமிடம் அவரது கருணையின் உச்சம். “ஆளு சாவல யேசப்பா” என்பதே அவனது பாவதை சுமக்க அவருக்கு போதுமானதாக இருந்தது. இயேசு பிதாவின் பகுதிகளை படித்ததும் என்னை அறியாமல் சிரித்துக்கொண்டே இருந்தேன். அங்கலாய்ப்பும் , கோவமும் மென அவரது உடல் மொழியை முழுவதாக ஒரு கன்னியாகுமரிகாரராய் மாற்றி விட்டர்கள். “இருந்தாலும் இந்த கன்யாகுமரி காரங்க ரொம்பத்தான் , கடவுள் கூட அவங்களை மாறியே பேச வச்சிடுவாங்க” என நினைத்து சிரித்து கொண்டேன். இக்கதை நகரும் விதமும் , கதாபாத்திரங்களை நிறுவிய விதமும் எனக்கு நெருக்கமானது.
வழித்துணை – யாரென்று தெரியாதவர்களுடன் ஒரு சிறு உரையாடலில் ஆரம்பித்து தனிப்பட்ட அந்தரங்க அனுபவங்களை கூட பகிர்ந்து கொள்வது ஒரு இந்திய தன்மை என்றெனக்கு ஒரு எண்ணம் உள்ளது. நம்மளவுக்கு ஒரு அயலானை நெருக்கமாக்கி கொள்பவர்கள் மிக குறைவு. ரயில் பயணங்களில் இதை நாம் பார்க்க முடியும். பயணம் முடிகையில் அலைபேசி எண் மாற்றிக்கொண்டிருப்பார்கள்.இக்கதையின் முடிவில் கூட நவீன அவரை அண்ணே என்றழைப்பான். இந்த தன்மையை மிக விரிவாக பேசும் கதை இது. என்னை போன்று நெடுங்காலம் இந்தியாவை விட்டு வெளியில் இருப்பவர்களுக்கு இந்த தன்மை வெகுவாக குறைந்து போகும். எங்கள் குழந்தைகள் இன்னும் மோசம். இக்கதை வெளிநாட்டில் உள்ள இந்தியா குழந்தைகளுக்கு இந்திய தன்மையை புரிந்து கொள்ள உதவலாம். பெரியவரின் புன்னகை, சொல்லிவிட்டு வெடித்து சிரிக்கும் பாங்கு கதை நெடுக வருகிறது. கடைசியாக பஸ் ஏறும் போது கூட கண்டக்டரிடம் ஏதோ சிரித்து பேசுகிறார். அணைவரிடமும் சிறிது புன்னகையை பகிர்ந்து கொள்பவர்கள் இந்திய சமூகத்தின் நேர்நிலை முகங்கள்.
சோகம் , நகைச்சுவை கலந்த வாழ்வனுபவங்கள் , வரலாற்று புனைவு என பல வகை கதைகளை மிக ஆழமாக புனைந்த ஒரு தொகுப்பாக இருந்தது. “முடியாட்டம்”,”மருபூமி” போன்ற கதைகள் அதன் தீவிர தன்மையால் மறக்காது என்றால், ”ஜஸ்டினும் நியாயத்தீர்ப்பும்”, ”போர்க் ரோஸ்ட்” போன்ற கதைகள் அதன் நகையாடல்களுக்காக மறக்காது. அடுத்தடுத்த உங்கள் தொகுப்புகளை எதிர்நோக்கி காதிருக்கிறேன்.
நன்றி
முத்து
2026/04/17

