மவுண்ட் ஃபுஜி , ஜப்பானிய மொழியில் ஃபுஜிசான்(富士山) என்றழைக்கிறார்கள். ஃபுஜி(富士) என்பது அம்மலையின் பெயர், சான்(山) என்பது மலைகளை குறிக்கும் சித்திர சொற்கள்(ஜப்பானிய மொழியில் காஞ்சி). ஜப்பானை பற்றி எங்கு தேடினாலும் முதலில் கிடைக்க கூடிய படம் ஃபுஜிசான் படம் தான். மிகப் பிரபலமானது ஹொகுசாய் வரைந்த “Great Wave of Kanagawa” படம் .

அவரது Thirty-six Views of Mount Fuji என்னும் Ukiyo-E(மிதக்கும் ஓவியம்) வகை ஓவிய தொகுப்பின் புகழ்பெற்ற படமிது.
2010இல் இருந்து ஜப்பானிய மொழியை படிக்க ஆரம்பித்து 2013 இல் ஜப்பான் வந்து சேர்ந்தேன். பாட புத்தகங்களின் அட்டை படங்களில் பெரும்பாலும் ஃபுஜி சான் படங்களே இருக்கும். ஜப்பானில் இருந்து வருவோர் வாங்கி வரும் இனிப்புகளிலும் அதுவே. அகண்ட முக்கோணமாக நிற்கும் ஒற்றை மலை. ஜப்பான் என்றாலே ஃபுஜி சான் படங்கள் எழுமளவுக்கு நம்மையறியாமலே நாம் தள்ள படுவோம். ஜப்பான் வந்திறங்கியதும் ஃபுஜி சான் பார்க்கும் ஆசை எனக்கும் வேரூன்றியது. ஃபுஜி சானை பற்றி தேட ஆரம்பித்தேன். ஜப்பான் வந்து சேரும் வரை அது ஒரு எரிமலை என்று கூட அறியாமல் இருந்தேன். மிக ஆச்சரியமாக டோக்கியோவின் பல இடங்களில் இருந்து ஃபுஜி சானை பார்க்க முடியுமென அறிந்து கொண்டேன். ஒரு பெரு நகரத்திலிருந்து ஒரு மலையை பார்க்க முடியுமென்பது எனக்கு ஒரு திடுக்கிடலாக இருந்தது. நான் மெட்ராசீல் வளர்ந்தவன் , காடு, மலை, அதையொட்டி ஓடும் ஆறு என்பதெல்லாம் கிராமங்களில் மட்டுமே இருக்கும் என்ற புரிதல் கொண்டிருந்தேன். ஜப்பான் வந்த பின் தான் நகரங்களின் நடுவில் ஓடும் ஆறுகள் இவ்வளவு சுத்தமாக இருக்க முடியுமென தெரிந்து கொண்டேன்.
2013 இல் நான் வசித்த ஹாசியோஜி(Hachioji) பகுதி டோக்கியோவின் மேற்கு எல்லை பகுதி, மைய டோக்கியோவை விட ஃபுஜி சான் அருகிலிருப்பதால் அங்கிருந்து ஃபுஜி சானை பார்ப்பது எளிது என புரிந்தது. ஆனால் எங்கிருந்து பார்த்தால் தெரியுமென தெரியவில்லை. அன்று ஃபுஜி சானை பார்க்க கூடிய இடங்களை தேடுவது அவ்வளவு எளிதாக இல்லை. பயணிகள் எழுதும் வலைப்பதிவுகள்(Blog) தான் ஒரே தகவல் மையம். ஒரு வலைப்பதிவர் அவர் பார்த்த ஃபுஜி சான் காட்சிகளை படங்கள் மற்றும் அந்த இடத்தின் தோராயமான கூகிள் மேப் தரவுகளுடன் பகிர்ந்திருந்தார். அவரது பதிவின் படி தகவோ மலையேறினால் அங்கிருந்து பார்க்க முடியுமென இருந்ததால், அருகாமையில் இருக்கும் தகவோ சானுக்கு நண்பர்களுடன் ஒரு பயணம் புறப்பட்டோம். தகவோ சான்(Mt Takao) 600மீட்டர் உயரமுள்ள ஒப்புநோக்க சிறிய மலை. டோக்கியோவின் மேற்கு எல்லையில் அமைந்துள்ளதால், டோக்கியோ வாசிகளின் ஆஸ்தான மலையேற்ற பாதை. வருடத்திற்கு 25 லட்சம் பயணிகள் இம்மலையில் ஏறுவதாக தகவல். உலகளவிலுமே அதிக மக்கள் மலையேறும் மலைகளில் ஒன்று. கடினமான மலை பாதையெல்லாம் இல்லை, சற்றே ஏற்றம் தான் என்றாலும் ஒரு மூன்று மணி நேரத்தில் சிகரம் வரை சென்று விட முடியும். நாங்கள் சென்றது ஜூன் மாதம், வெயில் காலம் அப்போது தான் தொடங்கியிருக்கும். சராசரியாக 25பாகையில் இருந்து 29 பாகை வரை இருக்கும். டோக்கியோவில் வெப்பநிலை அதிகமில்லை என்றாலும் ஈரப்பதம்(Humidity ) அதிகம் என்பதால் , வியர்வை அதிகமாக வெளிவரும். வெயிலில் உருவாக்கும் உடல் வியர்வை சாதாரணமாக காற்றில் கரைய முற்படும் , ஆனால் ஏற்கனவே காற்றில் ஈரப்பதம் அதிகமிருப்பதால் வியர்வை கரைய முடியாமல் நம் உடலிலே தங்கிவிடும், இது உடலுஷ்ணத்தை அதிக படுத்தி உடலிலுள்ள அனைத்து நீர் சத்துகளையும் இல்லாமல் செய்து விடும்.தலைக்கு மேல் யாரோ ஒரு ஸ்டரா போட்டு உறஞ்சி கொண்டிருப்பது போலிருக்கும். சில மணி நேரங்கள் தண்ணீர் குடிக்கவில்லை என்றால் உடலில் இருக்கும் தண்ணீர் முழுவதும் வெளியேறி மயக்கம்(ஹீட் ஸ்ட்ரோக்) வந்து விடும்.
இதனால் பெரும்பாலான மலையேறுபவர்கள் ஒரு நனைந்த துண்டை கழுத்தில் சுற்றி கொண்டு நடப்பார்கள், குழந்தைகள் கூட அதை பின்பற்றும். சென்னை போன்ற ஒரு வெப்ப பூமியில் இருந்து வந்த எனக்கு முதலில் அதை பார்த்த போது சிரிப்பே வந்தது. இதை விட பத்து பாகை அதிகமான எங்களூரில் காலை முதல் மதியம் வரை தண்ணீரே குடிக்காமல் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்திருக்கிறேன். இதெல்லாம் ஒரு வெயிலா என்றே தோன்றியது. சிறிது தூரம் ஏறிய பிறகே ஈரப்பதம் அதிகமிருப்பதின் பாதிப்பை உணர்ந்து கொள்ள முடிந்தது. அந்த மலைப்பதையிலும் தானியங்கி விற்பனை இயந்திரங்கள் இருப்பதால் தப்பித்தோம். ஒரு வழியாக சிகரத்திற்கு சென்று ஃபுஜி சானை தேடினால் வெறும் மேகக்குவியல்கள் தான் காணக்கிடைத்தது.
அன்று கொஞ்சமே தெரிந்த ஜப்பானிய மொழியை வைத்து கொண்டு பார்ப்பவர்களிடமெல்லாம் இங்கிருந்து எப்படி ஃபுஜி சானை காண்பது என்று கேட்டு கொண்டிருப்பேன். அப்போது ஜப்பானிய மொழி கற்று கொண்டிருந்த ஆசிரியரிடம் இது பற்றி பேசிக்கொண்டிருந்த போது அசா ஆற்றங்கரையிலிருந்து பார்க்க முடியுமெனவும் ஃபுஜி சான் இருக்கும் திசையயும் ஒரு சிறு வரைபடமாக வரைந்து கொடுத்தார். ஜப்பானியர்கள் வழிகளை வரைபடங்களாக வரைவதில் வல்லுனர்கள். வரைபட தொழில்நுட்பம் வளர்ந்த இன்று கூட விளம்பர பலகைகளில் நாம் சிறு வரைபடங்களை பார்க்க முடியும். அவரது வரைபடத்தை வைத்து அசா ஆற்றங்கரையில் ஒரு அரை நாள் சுற்றி வந்தேன். எங்கும் காண முடியவில்லை. கரை நெடுக குடும்பம் குடும்பமாக மீன் பிடித்து கொண்டிருந்தார்கள். வெயில் காலம் வந்துவிட்டால் ஜப்பானியர்கள் ஆற்றங்கரையில் கூடி விடுவது வழக்கம்.
அதன்பின் வேலைப்பலு அதிகமானது. காலை 8.30 ஆபீஸ் சென்றால் இரவு 8 மணி வரை வேலை தான். அதன்பின் வந்து சமைத்து சாப்பிட தான் நேரமிருக்கும். வெயில் காலம் முடிந்து , இலைகள் நிறம் மாறி ஊரே ஒரு வித பொன்னிறமாய் ஜொலிக்கும் இலையுதிர் காலமும் முடிந்து போனது. இனி ஃபுஜி சானை இங்கிருந்து பார்க்க நினைப்பது வீண் வேலை, ஃபுஜி சான் மலைக்கு அருகே சென்று விட வேண்டியது என்று நினைக்க துவங்கிவிட்டேன். குளிர் காலம் ஆரம்பித்திருந்தது, நான் வசித்த ஹசியோஜி பகுதி மலைகளுக்கு அறுகிலிருப்பதால் மைய டோக்கியோவை விட குளிர் அதிகமாக இருக்கும். டிசம்பரின் ஒரு குளிர் நாளில் ஹசியோஜியில் இருந்து மைய டோக்கியோவில் இருக்கும் வங்கி வரை போக வேண்டி இருந்தது. அன்றெல்லாம் இன்று போல கைபேசியில் சில நொடிகளில் இந்தியாவிற்கு காசு அனுப்ப முடியாது. இந்திய வங்கியின் டோக்கியோ கிளைக்கு சென்று தான் அனுப்ப முடியும். நான் வசித்த இடத்திலிருந்து ஒன்றரை மணி நேரம் ரயிலில் பயணிக்க வேண்டும். நீண்ட பயணம் தான் என்றாலும் எனக்கு மிக பிடித்த பயணங்கள் அவை. காலை முதல் மாலை வரை வேலை என்பதால் வார இறுதி விடுமுறைகளில் பெரும்பாலும் தூக்கம் தான். டோக்கியோ நகரத்தை பார்க்கும் வாய்ப்பு மிக குறைவு. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வங்கி செல்லும் சாக்கில் மைய டோக்கியோ நகரத்திற்கு செல்வது மனதுக்கு அணுக்கமான பயணமாகி போனது. அன்று டோக்கியோவில் இருந்து ஹாசியோஜிக்கு திரும்ப வரும் ரயிலில் அந்த காட்சியை கண்டேன். தசிகவா ரயில் நிலையத்திற்கும் ஹிணோ ரயில் நிலையத்திற்கும் நடுவில் தமா ஆற்று பாலத்தின் மேல் ரயில் பயணம் செய்யும். ரயிலின் வலது புறம் ஆறு என்பதால் பெரிய கட்டடங்கள் இல்லாமல் வெகு தூரம் பார்க்க இயலும். மிக தற்செயலாக ஆற்றை கடந்து கொண்டிருக்கும் போது வலது புறம் திரும்பினால் , வழக்கத்திற்கு மாறான ஒரு வெள்ளை நிறம் கண்ணில் பட்டது. சற்றே நீலம் கலந்த வெள்ளை ஒரு முக்கோண வடிவில் குவிந்து இருப்பது போலான ஒரு காட்சி. முழு முக்கோணம் ஒன்று தலைக்கு மேல் அமர்ந்திருப்பது போன்று இருந்தது. அது என்னவென்று உணர்வதற்குள் ரயில் கடந்து சென்று விட்டது. சில நிமிடங்கள் ஏதோ பெரிய ஒன்று கூடவே வருவது போல ஒரு இருப்பை உணர்ந்து கொண்டிருந்தேன். அடுத்த ரயில் நிலையம் சென்ற பின்பே இது ஃபுஜி சானாக இருக்கலாமோ என்றுணர்ந்தேன். எப்படி சரிபடுத்தி கொள்வதேன தெரியவில்லை ஆபீஸ் செல்லும் வரை அந்த காட்சியை கண்களுக்குள் ஒட்டி பார்த்து கொண்டே இருந்தேன். ஆபீஸ் சென்று வெகுநாட்கள் ஜப்பானில் வசிக்கும் மேலாளரிடம் கேட்டேன், அது ஃபுஜி சான் தான் என்று அவரும் உறுதிப்படுத்தினார். இது வரையிலான வாழ்வின் ஒரு அரிய காட்சி அது. மலை என்று எனக்குள் இருந்த உருவகங்கள் அனைத்தும் மறு சீரமைப்பு செய்யபட்டன. அதுவரை நான் பார்த்தவைகள் பச்சை போர்த்திய சிறு மலைகளோ அல்லது பழுப்பு நிறத்தின் நீண்ட மலைகளோ தான், இது மலைகளுக்கெல்லாம் மலை என நினைத்து கொண்டேன்.

இந்த படம் எடுக்கபட்டது அந்த ரயிலில் இருந்து தான். தகவல் மூலம்: https://fujisan3776.jp/ekifuji/5102/51024427_3.jpg
ஃபுஜி சானை பார்த்த பரவசம் அந்த வாரம் முழுக்க இருந்தது. வார இறுதியில் நடக்கும் ஜப்பானிய மொழி பயிற்சிக்கு சென்று ஆசிரியரிடம் ரயிலில் இருந்து பார்த்த ஃபுஜி சானை கண்கள் விரிய விவரித்து கொண்டிருந்தேன். நீங்கள் அசா ஆற்றங்கரையிலிருந்து தெரியுமென்று சொன்னீர்களே , அது அசா ஆறு அல்ல தமா ஆறு என்று அவரிடம் விவாதித்தேன். எனது ஆர்வ கோளாரை பொருட்படுத்தாமல் இப்பொழுது போய் பார் அசா ஆற்றங்கரையிலிருந்தும் தெரியும் என்றார். வெயில் காலத்தை விட குளிர் காலத்தில் ஃபுஜி சான் மிக தெளிவாக தெரியுமென்றார். வெயில் காலத்தில் பசிபிக் பெருங்கடலில் இருந்து வரும் சூடான காற்று தாங்கி வரும் ஈரப்பதம் ஒரு படலம் போல ஆகிவிடுவதால் வெகு தூரம் பார்க்க முடிவதில்லை. குளிர் காலமானதும் சைபிரியாவில் இருந்து வரும் குளிர் காற்று ஈரப்பதம் இல்லாததும் மிக மிக உலர்ந்ததுமாக இருப்பதால் காற்று படலங்கள் இல்லாமல் வெகு தூரம் பார்க்குமாறு அமைந்திருக்கிறது என்று விளக்கினார்.
மறுநாளே அசா ஆற்றங்கரைக்கு சென்றால் அவர் சொன்னது போலவே மிக தெளிவான ஃபுஜி சானின் வெள்ளை சிகரத்தை காண முடிந்தது. மேகங்கள் எல்லாம் அதன் கழுத்துக்கு கீழே இருந்தது. ஆறு ஓடி கொண்டிருக்கும் ஓசையை கேட்டவாறு ஃபுஜி சானை பார்த்து கொண்டிருப்பது ஒருவித அமைதியை கொடுத்து. முன்பிருந்த பரவச நிலை இப்பொழுது இல்லை. நெஞ்சளவு தண்ணீருள்ள ஆற்றில் இறங்கிய பின் உடல் இறுகி போய் ஒரு நடுக்கம் வரும், சில நிமிடங்களுக்கு பின் மெதுவாக இறுகிய உடல் இளகி நெஞ்சு நடுக்கம் சீராக ஆகும். அது போன்ற ஒரு உணர்வு, உள்ள கொந்தளிப்புகள் அடங்கி ஒரு சாந்தம். அன்று ஏன் அப்படி தோன்றியது என்று தெரியவில்லை, ஃபுஜி சானை பார்க்கும் போது ஒரு பழுத்த மூதன்னை நம் முன் அமர்ந்திருப்பது போன்றிருந்தது . நான் அனைத்தையும் பார்த்து விட்டேன் , அனைத்தையும் கடந்து விட்டேன், இனி ஒன்றுமில்லை , இங்கிருப்பது மட்டுமே, என தன் சிறுகண்களை சுருக்கி நெடுதூரம் பார்க்கும் கிழவி. பேரழகி!!


