ஃபுஜி சான் என்னும் மூதன்னை-2

அதன் பின் எங்கு பயணம் செய்தாலும் ஃபுஜி சான் தெரியக்கூடிய திசையை தேடி பார்ப்பது என்பது வாடிக்கையாகி போனது. ஒரு நாள் எனது வீடு அருகில் இருக்கும் சாலையை கடக்கும் நடை மேம்பாலத்தில் நடந்த போது தற்செயலாக நோக்கினால் ஃபுஜி சானை பார்க்க நேர்ந்தது. இவ்வளவு அலைந்துவிட்டேன் வீட்டுக்கு அருகிலே பார்க்க முடியுமென தெரியாமல் போய்விட்டதென்று சிரித்து கொண்டேன். அன்றிலிருந்து அலுவலகம் செல்லும் எல்லா நாளும் தரிசனம் செய்து விட்டு தான் செல்வேன். ஏப்ரலில் வசந்த காலம் தொடங்கும் வரை பார்க்க முடியும், அதன்பின் மேகத்திரை மட்டுமே.

மூதன்னையாக கற்பனை செய்யும் உணர்வு எனக்கு மட்டும் தான் என நினைத்திருந்தேன். அருகில் இருப்பவர்கள் எவருக்கும் அந்த கற்பனை புரியவே இல்லை. இந்திய நண்பர்களுக்கு ஃபுஜி சான் ஒரு சுற்றுலா பொருளாகவே இருந்தது, ” ஏன் டா இவ்ளோ romanticize பண்ற , அவ்ளோ hype தேவை இல்லை என்றனர்”, சரிதான் இவர்களுக்கு புரிய வைக்க முடியாது. ஜப்பானியர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நினைத்தேன். அவர்களுக்கு ஃபுஜி சான் நிச்சயமாக ஒரு ஆழ்மன படிமம், அதே சமயம் அன்றாடமும் கூட. “நீங்கள் சொல்லுமிடங்களில் இருந்தெல்லாம் ஃபுஜி சான் தெரியுமென எங்களுக்கு தெரியவே தெரியாது. நீங்கள் புதிதாக பார்க்கிறீர்கள் இல்லையா அதனால் உங்களுக்கு பரவசமாக இருக்கிறது” என்று கடந்து போயினர். ஒரே ஒரு ஜப்பானியர் மட்டும் நான் சொல்வதை கேட்டு தனக்கும் இது போன்ற உணர்வு வருவதுண்டு என்றார். ஆனால் மூதன்னை அல்ல, ஒரு சிறு குழந்தை போல பாவிக்கிறேன் என்றார் . சிறு குழந்தைகளிடம் நாம் கண்களை கைகளால் மூடி “எங்க போச்சு , காணோம் , காணோம் , இதோ இருக்கு ” என்று விளையாடும் விளையாட்டு ஜப்பானிய மொழியிலும் உண்டு. காரில் பயணிக்கும் போது திடீரென காட்சியளித்து, திடீரென மறைந்து போகும் ஃபுஜி சானை பார்க்கும் போது ஒரு சிறு குழந்தையுடன் விளையாடும் உணர்வு வருமென்றார். நம்மை போல சைகோக்கள் இருக்க தான் செய்கிறார்கள் என்பது ஆறுதலாக இருந்தது.

ஜப்பானிய சமூகத்திற்கு ஃபுஜி சான் என்ன மாதிரியான குறியீடாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள ஒரு ஆர்வமிருந்தது. அதற்கு எளிமையான ஒரு வழி ஃபுஜி சான் பற்றிய தொன்ம கதைகளை பற்றி அறிந்து கொள்ளவது தான். மிக ஆச்சரியமாக ஜப்பானின் முதல் காவியங்கள் எனப்படும் கொஜிகி(Kojiki ,古事記) மற்றும் நிஹொன் ஷோகி(日本書紀) ஆகியவற்றில் ஃபுஜி சான் பற்றிய ஒரு குறிப்பு கூட இல்லை. பொ.ஆ 712 இல் இருந்து 720 வரை தொகுக்கப்பட்ட இக்காவியங்கள் பொ.ஆ.மு 600 இல் இருந்து ஜப்பான் என்ற நிலம் உருவான தொன்ம வரலாற்றை பேசுகிறது. அன்றைய ஜப்பானின் தலைநகரம் ஜப்பானின் மத்தியில் கியோட்டோ விற்கு அருகிலுள்ள நரா நகரம், அன்றைய அரசியின் உத்தரவின் பேரில் நரா மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள அறிவுஜீவிகள் இக்காவியத்தை தொகுத்தனர். நராவில் இருந்து வடக்கே சில நூறு கிமீ தள்ளி உள்ள ஃபுஜி சானை அவர்கள் பார்க்க வாய்ப்பு இல்லாததால் ஃபுஜி சான் பற்றிய குறிப்புகள் இல்லாமல் போயிருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் ஃபுஜி சான் போன்ற பெரு மலை கனவுகளுக்குள் எளிதாக நுழைபவை, ஒரு சிலர் பார்த்திருந்தால் கூட அதை பற்றிய தொன்ம கதைகள் வளர்ந்து வந்திருக்கும். என்னளவில் ஃபுஜி சான் விடுபட்ட காரணம் இதுவாகவே இருக்கலாம். அரசியின் ஆணையின் பால் தொகுக்கபட்டதால் பெருமளவு மங்கல குறியீடுகள் மட்டுமே இடம்பெறும் படி செய்திருக்கலாம். ஃபுஜி சான் ஒரு எரிமலை, அதுவும் அன்று எரி பிழம்புகளை கொப்பளித்து கொண்டிருந்த எரிமலை, அதை பற்றி குறிப்பிடுவது ஒரு அமங்கல குறியீடாக கருதப்பட்டிருக்கலாம். பொ.ஆ 759 இல் வெளிவந்த வந்த மான்யோஷு(Man’yōshū 万葉集) என்னும் ஜப்பானிய வகா கவிதைகளின் தொகுப்புகளின் ஃபுஜி சான் குறிப்பிடபட்டிருக்கிறது.

முதலில் கொஜிகி(Kojiki ,古事記) மற்றும் நிஹொன் ஷோகி(日本書紀)யில் குறிப்பிடப்படும் கோனோசகுயாஹிமே(Konohananosakuya-hime 木花咲耶姫) யில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். கோனோசகுயா என்றால் மலர்தல் என்று பொருள், ஹிமே என்றால் இளவரசி. கொஜிகி(Kojiki ,古事記) குறிப்பிடும் ஜப்பானின் முதல் அரசரான ஜிம்மு வின் பாட்டனார் நினிகி கோனோசகுயாஹிமே மீது காதல் கொண்டு அவரது தந்தையிடம் திருமணம் செய்ய அனுமதி கேட்கிறார். தந்தையோ தனது மூத்த மகளான இவாநகா(பாறைகளின் இளவரசி) யை பரிந்துரைக்கிறார். ஆனால் நினிகி கோனோசகுயாஹிமே தான் வேண்டும் என்று அடம்பிடிப்பதால் வேறு வழியில்லாமல் ஒத்து கொள்கிறார். நினிகி யின் வழித்தோன்றல்கள் வழியாக மனித குலம் பெருகியது என்னும் தொன்மம் உள்ளதால், நினிகி பல காலங்கள் வாழக்கூடிய பாறையை விட்டு சில காலமே வாழும் மலரை திருமணம் செய்ததால், வழித்தோன்றல்களான நாமும் சில காலமே வாழும் மானுடர்களாகி போனோம் என்ற நம்பிக்கை உள்ளது. திருமணம் முடிந்த பின் கோனோசகுயாஹிமே மிக சீக்கிரமே கருவுற்று விடுவதால் நினிகி சந்தேகப்படுகிறார். இதனால் கோபமடைந்த கோனோசகுயாஹிமே ஒரு கதவற்ற குடிசைக்குள் சென்று தீ வைத்து கொண்டு , உனது குழந்தைகளாக இருந்தால் இந்த தீயிலும் அவை ஒரு குறை இல்லாமல் பிறந்து வரும் என்று சபதமிடுகிறார். அவர் சபதமிட்ட படியே மூன்று ஆண் குழந்தைகள் பிறந்து வருகிறது. ஏற்கனவே குறிப்பிட்டது போல இது எழுதப்பட்ட போது ஃபுஜி சான் பற்றி எதுவும் குறிப்புகள் இல்லை.

இதன்பின் ஒன்பதாம் நூற்றாண்டில் ஃபுஜி சான் பெரு வெடிப்புகளை நிகழ்த்துகிறது. கிட்டதட்ட பத்து நாட்கள் வெடிப்புகள் நிகழ்ந்து எரி குழம்புகள் மேற்கு பக்கமாக வழிந்து அன்றிருந்த ஒரு ஏரி இரண்டு ஏரிகளாக பிளவுபட்டதாக சொல்லப்படுகிறது. அன்றைய அழிவு காட்சிகளை பார்த்து மனம் வெகுந்த அரசர் ஃபுஜி சானுக்கான கடவுளான “அசாமா ஓகமி” க்கான கோயில்களை நிறுவுமாறு ஆணையிட்டார். அசாமா ஓகமி எரிமலைக்கான ஷின்டோ கடவுள். ஃபுஜி சாணை சுற்றிலும் அசாமா ஓகமி வீற்றிருக்கும் சென்கென் ஜின்ஜா(Sengen Shrines) க்களை இன்றும் நாம் பார்க்க முடியும்.

இன்னும் ஒரு நூற்றாண்டு கடந்து , தகெதொரி மோனோகதறி யில் வரும் ககுயா ஹிமே கதை புகழ் பெற ஆரம்பிக்கிறது. மோனோகதறி என்பது நாட்டுபுற பாடல் வடிவம். தகெதொரி என்றால் மூங்கில் சேகரிப்பவன் என்று பொருள். குழந்தை இல்லாத ஓகினா மூங்கில் சேகரிக்கும் பொழுது மினுமினுக்கும் ஒரு மூங்கிலை பார்க்கிறார், அதை வெட்டி பார்த்தால் உள்ளே கட்டை விரல் அளவில் ஒரு அழகிய பெண் குழந்தை இருந்தது. அக்குழந்தைக்கு ககுயா ஹிமே என்று பெயர் வைத்து வளர்க்கின்றனர். அதன்பின் ஒவ்வொரு முறை மூங்கில் சேகரிக்கும் பொழுதும் ஓகினா விர்க்கு சிறிது தங்கமும் கிடைக்கிறது, அதை வைத்து அந்த குடும்பமே பணக்கார குடும்பமாக மாறுகிறது. ககுயா ஹிமேயின் அழகை பற்றி கேள்விபட்டு அவளை திருமணம் செய்துகொள்ள ஏராளமானவர்கள் விண்ணப்பம் போடுகிறார்கள். ஏனோ அவளுக்கு திருமணத்தில் ஆர்வமில்லை. செய்ய முடியாத காரியங்களை செய்ய சொல்லி வருபவர் அனைவரையும் திருப்பி அனுப்பி கொண்டிருந்தாள். அவளது அழகை கேள்விபட்டு அரசரே வந்து பெண் கேட்கிறார். தான் இந்த நிலத்தின் மகளல்ல என்றும் , என்றாவது தனது நிலமான நிலவுக்கு திரும்ப செல்ல வேண்டுமென்று சொல்லி அரசரின் காதலையும் மறுக்கிறாள். உன்னை நிலவுக்கு கொண்டு செல்ல விடாமல் எனது படைகள் தடுக்கும் என சொல்லி பெரும் படையை காவல் செய்ய ஆணையிடுகிறார் அரசர். ஆனால் ஒரு முழு நிலவு நாளில் , நிலவின் ஒளி மிகுந்து அனைவர் கண்களையும் மறைக்க , அந்த நொடியில் ககுயா ஹிமே நிலவுக்கு திரும்ப கொண்டு செல்ல படுகிறாள். செல்லும் முன் தன்னை வளர்த்த பெற்றோருக்கும், தன்னிடம் அன்பு செலுத்தியவர்களுக்கும் கடிதம் எழுதி வைத்து செல்கிறார். அரசருக்கு ஒரு கடிதமும், சாகாவரம் பெற்று அவர் வாழ வேண்டும் என்பதற்காக சிறிதளவு அமிர்தமும் அனுப்புகிறாள். அவள் மறைந்து சென்ற வருத்தத்தில் அரசர் அந்த அமிர்தத்தை அருந்த மறுக்கிறார். இந்நாட்டில் நிலவுக்கு நெருக்கமான இடமெதுவோ அங்கு சென்று இந்த அமிர்தத்தை எரித்து விடுங்கள் என்று ஆணையிடுகிறார். அந்த புகை ககுயா ஹிமே இருக்குமிடம் வரை சென்று நான் அமிர்தத்தை அருந்தவில்லை என்று அவள் அறிய வேண்டும் என்று ஆசைபடுகிறார். நாட்டின் உயரமான இடமான ஃபுஜி சானில் இந்த எரித்தல் சடங்கை செய்தால் நிலவில் இருக்கும் ககுயா ஹிமேவை எளிதில் சென்றடைய முடியும் என்பதால் ஃபுஜி சானின் சிகரத்தில் அமிர்தம் எரிக்கபடுகிறது, அப்பொழுது பெரிய அளவில் புகை எழுந்து வந்ததாக அந்த கதை முடிகிறது.

ககுயா ஹிமே நிலவுக்கு திரும்ப செல்ல வில்லை, ஃபுஜி சானின் சிகரத்திற்கு சென்று அங்கேயே வீற்றிருக்கிறாள் , அங்கு எரிக்கபட்ட அமிர்தத்தின் புகை தான் எரிமாலையாக மாறுகிறது , அவள் தான் இந்த எரிமலையின் கடவுள் என்று ஒரு தொன்மம் உருவாகி வந்தது. சாகாவரம் பெற்ற ஒரு பெண் தான் எரிமலையாகி அவ்வப்போது ஏரி பிழம்புகளாக வெடிக்கிறாள் என்று நம்பப்பட்டது. வெடிக்கும் பொது பல உயிர்களை பறித்தாலும், எரி பிழம்புகள் மண்ணாக இறுகும் பொது , உயர் சத்துள்ள மண்ணாக மாறி நல்ல விளைச்சலை கொடுக்கும் என்பது ககுயா ஹிமேயின் கருணையே என்று நம்பபட்டது. இந்த தொன்மம் வழியாக 15 ஆம் நூற்றாண்டு வரை ஃபுஜி சானின் கடவுளான “அசாமா ஓகமி” யின் வாழ்ந்த வடிவம் ககுயா ஹிமே தான் என்று நம்பபட்டது.

ஆனால் 15 ஆம் நூற்றாண்டிற்க்கு பின் இன்று வரை “அசாமா ஓகமி” யின் வாழ்ந்த வடிவமாக கோனோசகுயாஹிமே(Konohananosakuya-hime 木花咲耶姫) வாக மாற்ற பட்டிருக்கிறது. 15 ஆம் நூற்றாண்டில் கடவுள்களுடன் தொடர்புடைய தொன்மங்கள் சிறிதளவு பட்டி தீட்டப்படுகிறது. அன்று ககுயா ஹிமேயின் தொன்மம் ஒரு புகழ்பெற்ற நாட்டுபுற கதையாக மட்டும் கருதப்பட்டிருக்கலாம். அதை விட தொன்மையான எரியின் நடுவே குழந்தைகளை ஈன்ற கோனோசகுயாஹிமே(Konohananosakuya-hime 木花咲耶姫) என்பதே ஒரு எரிமலைக்கான சரியான குறியீடாக கருதப்பட்டிருக்கலாம். ஆகவே இன்று “அசாமா ஓகமி” அனைத்து கோயில்களிலும் பிரதிஷ்டை(Enshrined)செய்ய பட்டிருப்பது கோனோசகுயாஹிமே தான்.

தங்கள் நிலத்தின் உயர்ந்த மலை ஒரு எரிமலை என்பதும் அது ஏற்படுத்தும் அழிவும், அழிவிற்க்கு பின் அது தரும் நன்மையை ஒரு சமூகம் தொடர்ச்சியாக தொன்மங்கள் வழியாக வகைப்படுத்தி கொள்வதை நாம் இங்கு காண முடிகிறது. ஒன்று மட்டும் நிச்சயம் , ஜப்பானியர்களுக்குமே ஃபுஜி சான் ஒரு மூதன்னை வடிவம் தான்.

Discover more from வேடிக்கை பார்ப்பவன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading