அன்பு செந்தில் அண்ணனுக்கு
இசூமியின் நறுமணம் படித்ததும் அந்த சூட்டோடு கடிதம் எழுதி விட வேண்டுமென இக்கடிதத்தை எழுத ஆரம்பிக்கிறேன்.
சென்னையில் பிறந்து வளர்ந்து,எல்லோரையும் போல எஞ்சினியரிங் முடித்து சாப்ட்வேர் எஞ்சினியர் ஆகி, மூச்சை போட்டு ஜப்பான் மொழி பயின்று, ஜப்பான் வந்து பத்து வருடங்கள் ஓடிவிட்டது. மிக எளிதாக இக்கதைகளில் வரும் ஜப்பானிய பின்புலத்தின் மேல் ஒன்றி விட முடிகிறது. குறிப்பாக 13பெருக்கல்13 உடனே சொல்க என்று கேக்க படாத இந்தியனே இங்கு இருக்க முடியாது என எண்ணுகிறேன். மருத்துவமனை காத்திருப்புகள், ITஅலுவலகங்களின் அரசியல்கள், இசாகயா(ஜப்பானிய பப்) காட்சிகள், டோகியோவின் மெட்ரோ ரயில் நெரிசல்கள் என ஜப்பானின் புலம்பெயர் இந்தியர்களின் வாழ்க்கை இயல்பாக கதைகளுக்குள் உலவுகிறது.
ஒரேடியாக அனைத்து கதைகளையும் படித்து விட வேண்டும் என்று தான் ஆரம்பித்தேன், ஆனால் என்னை தூக்கி வாரிப்போட்டது “செர்ரி பிளாசம்” கதை. அப்படி ஒரு முடிவை நான் எதிர்பார்க்கவே இல்லை. “சுகராகம் சோகம் தானே” னு வைரமுத்து பாட்டுல எழுதுன மாதிரி, அந்த மரணத்திலும் என்ன ஒரு கவித்துவம். இது நிஜமாக நடந்த சம்பவமா என நேரில் பார்க்கும் போது சொல்லுங்கள் அண்ணா. ஒரு எழுத்தாளனால் நேரில் பார்க்காமல் இதை கற்பனை செய்ய முடியாது என்று என் மனம் சொல்கிறது, சரிப்பார்த்து கொள்ளவே கேட்கிறேன். இறந்தவர்கள் உடல் வீடு வரும் வரையான காலம் மிக நெடியது, வெளி சொல்ல முடியாத வலி நிறைந்தது . அப்பாவின் உடலோடு மருத்துவமனை முதல் வீடு வரை பயணித்த ஒரு மணி நேரம் என் வாழ்வின் நான் மேற்கொன்ட மிகமுக்கியமான மெய்வழி பயணம். இக்கதை அந்த நினைவுகளை நோக்கி எனை தள்ள, அப்படியே புத்தகத்தை மூடி வைத்து விட்டு வெகு நேரம் சிந்தனையின்றி கிடந்தேன்.
“இசூமியின் நறுமணம்” கதையின் இசாகயா(ஜப்பானிய பப்) காட்சிகள் படிப்பது மிக உற்சாகமாக இருந்தது. அதிலும் குடிக்கும் போது ஜப்பானியர்களிடம் இருக்கும் முகபாவனைகள் பற்றியும், மறுநாள் காலை எதுவுமே நடக்காத மாதிரியான இறுக்க முகம் பற்றிய உங்கள் அவதானிப்பு மிகச்சிறப்பு. இங்குள்ள இந்தியர்கள் அனைவருக்கும் அது ஆச்சர்யத்தையும் ஒரு வித அச்சத்தையும் கொடுத்து இருக்கும். “என்னுடன் இந்த பொழுதில் அதை உணர்பவர்கள் பாக்கியவான்கள்” நானும் அந்த பாக்கியவான்களில் ஒருவனே. பெண் குழந்தைகளை பெற்ற தகப்பன்கள் இதை எளிதாக உணரமுடியும்.
“அன்பும், அறனும் உடைத்தாயின்” சிவநேசன் போல் தற்செயலாக சந்தித்து விடிய விடிய உரையாடும் நண்பர்கள் கிடைப்பது புலம்பெயர் உலகில் மிக உவப்பானது. தனித்திருக்கும் உலகில் அவர்கள் தேவதைகள் போன்றவர்கள். ரயில் முன் பாய்ந்து சாகும் ஜப்பானியர்களின் உளநிலை பற்றிய குறிப்புகள் சோகம் தருபவை. சிவநேசன் சொல்வது போல நம்மை போன்றவர்களுக்கு அந்நிலைமை வராது என்றே இதுவரை எண்ணியிருந்தேன். கதையின் முடிவு சற்று அதிர்ச்சி தருவதாக இருந்தது. சிவா ஏன் அப்படி செய்தார் என வெகு நேரம் மனதுக்குள் ஓடிகொண்டே இருந்தது.
“சிபுயா கிராசிங்“ தான் தொகுப்பிலேயே எனக்கு பிடித்த கதை. வீட்டை விட்டு வெளியே போகதவன் கணவில் பெருங்கூட்டம் அலையும் சிபுயா கிராசிங், முன்னால் போர்னோ நடிகை ஒரு வித சந்தேக தன்னுணர்வுடன் இருப்பது என இனிய முரண்களை பேசுகிறது கதை. அறையை விட்டு வெளியே போகாமல் பதினைந்து லட்சம் பேர் இருக்கிறார்கள் என்பது ஜப்பானில் வெளியே இருந்து படிப்பவர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுக்கக்கூடும். ஆனால் அவ்வகை இளைஞன் வெளியே வந்து சமூகத்தை பார்க்கும் காரணம் கவித்துவம் வாய்ந்ததாக எனக்கு பட்டது.
ஜப்பானில் இருக்கும் எல்லா இந்தியர்களுக்கும் “நடு ஆணிகளாய்
எஞ்சியவர்களளில் வருவது போல் ஒரு கிகுச்சி சான் இருந்து இருப்பார். முதலின் “யார்றா இவன்” என்று வெறுத்து, பின்பு முரண் பட்டு, அதன்பின் அவர்களின் தர்க்க அறிவுடன் போராட முடியாமல் சரணடைந்து, கடைசியாக “ச்சே என்ன மனுஷன் என்ன அறிவு”னு வியக்க கூடிய ஒரு ஜப்பானிய மானேஜர் எல்லாருக்கும் அமைந்து இருப்பார். நான் இரண்டாம் உலகப்போர்
குறித்து நிறைய வாசித்தும் நிறைய டாக்குமென்டரிகள் பார்த்தும்
இருக்கிறேன். கிழக்காசியாவில் ஜப்பானின் வன்முறைகள் வருந்ததக்கவை. அவை வடுவாக எஞ்சிய மனிதர்களின் பார்வையில் ஜப்பான் எப்படி இருக்கும் என்று வியந்து இருக்கிறேன், இக்கதை அதை பேசுகிறது. எதிர் நிலையாக
இல்லாமல் இயல்பாக ஜீவா சான் அதை பற்றி பேசுவது சிறப்பாக இருந்தது
“மடத்து வீடு”, “அனுபவ பாத்தியம்”, “அறமெனப் படுவது யாதெனக் கேட்பின்” முன்று கதைகளும் வாழ்ந்து கெட்டவர்கள் அல்லது பழம் பெருமை பேசி கெட்டு கொண்டிருப்பவர்களின் கதையை பேசும் விதம் பிடித்து இருந்தது. இக்கதைகள் படிக்கும் போது சற்று ஜெயமோகன் கதைகள் படிப்பது போல ஒரு உணர்வு எழுந்தது. ஒரு விதமான வேகமான நடை. ஒரு தலைமுறை
வாழ்க்கையை சில சொற்றொடர்களில் சொல்லி செல்வது போல.
“கனவுகளில் தொடர்பவள்” கதையில் வரும் இசுமியை போல் ஜப்பானின் கிராமத்தில் பிறந்து பின்பு டோகியோ வந்து கரைந்து போகும் பலரை சந்தித்து பேசி இருக்கிறேன். எந்நேரம் தங்கள் ஊருக்கு திரும்ப செல்வது பற்றியே பேசுவார்கள் ஆனால் போகமலே இருப்பார்கள். ஒரு வகையில் நான் கூட அப்படித்தான். இன்னும் இரண்டு வருடங்களில் ஊருக்கு போய் விட வேண்டும் என்று சொல்லியே பத்து வருடம் கடந்து விட்டது. காதலித்த பெண் மிக எளிமையாக நம்மை கடந்து சென்று ஒரு புது வாழ்க்கைக்குள் தன்னை பொருத்தி கொள்ளும் விந்தையை காணாத ஆண்
எவனுமில்லை இவ்வுலகத்தில். இது ஆணுக்கே உரிய அதீத எதிர்பார்ப்போ அல்லது தாழ்வு மனப்பான்மையாக இருக்கலாம். ஆனால் பெண்கள் எந்த தலைமுறையிலும் இவற்றை பொருட்படுத்தியதே இல்லை என்றே தோன்றுகிறது. “மலரினும் மெல்லிது” படித்து விட்டு தோன்றியவை இவை.
தானிவத்தாறி, கந்தாகவா நாட்டுபுற பாடல்கள் என நான் ஜப்பானில் இது வரை கேள்வி படாத சில ஏரியாக்களில் வெளிச்சம் பாய்ச்சி இருக்கிறீர்கள், நன்றி, இனிமேல் அவை பற்றி தேட தொடங்குவேன். இக்கதையை படித்த பின் உகுய்சுதாணி போய் பார்க்க வேண்டும் என்றொரு எண்ணம் வந்து இருக்கிறது. ஒரு நாள் போய் பார்ப்பேன்.
ஜெக்கு அவ்வப்போது சிறிய கடிதங்கள் எழுதியதோடு சரி, தமிழில் இவ்வளவு எழுதி வெகு நாட்கள் ஆகிறது. ஆனால் உங்கள் கதைகளை படித்த பின் என்னால் எழுத முடியும் என்ற நம்பிக்கை தோன்றி இருக்கிறது. ஆழ்மன படிமங்கள் சிலவற்றை தொட்டு எழுப்பி இருக்கிறீர்கள், அவற்றை ஒரு மாதிரி எழுதி பார்த்தால் கதைகளாக்க முடியும் என தோன்றுகிறது. எழுத முயற்சிக்கிறேன். நன்றி அண்ணா.
இப்படிக்கு
முத்து
2023இல் டோக்கியோவில் வாழும் எழுத்தாளர் செந்திலுக்கு எழுதிய கடிதம்

