என்னைப் பற்றி
முழுப்பெயர் முத்து பிரகாஷ். பொதுவாக முத்து என்றே அழைக்கபடுகிறேன். பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையில். தொண்ணூறுகளின் குழந்தைகளின் ஆஸ்தான வளர்ப்பு முறை . பள்ளியில் நன்றாக படித்து , நல்ல கல்லூரியில் மெரிட்டில் சேர்ந்து , கேம்பஸ் இன்டர்வியூ வில் ஒரு பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் சேர்ந்து பின்பு வெளி நாட்டிர்க்கு சென்று அங்கேயே அமைந்து விடும் பெரிய திருப்பங்கள் இல்லாத எளிமையான வாழக்கை. வாழ்க்கையில் பெரிய திருப்பம் என்றால் பெரும்பான்மை இந்திய மென்பொருள் பொரியாளர்களை போல அமெரிக்காவோ , ஐரோப்பாவோ செல்லாமல், ஜப்பான் சென்றதும், ஜப்பானிய மொழியை கற்று கொண்டதும் தான்.

ஜப்பான்
2013இல் ஜப்பான் வந்தேன். ஜப்பானின் குறுக்கும் நெடுக்கும் அலைந்து திரிந்திருக்கிறேன். ஜப்பானியர்களை போன்ற ஒழுங்கும் , அர்ப்பணிப்புள்ள மக்களை வேறு எங்கும் காண முடியாது . ஒரு சராசரி இந்தியா மனதால் ஏற்று கொள்ள முடியாத, உன்மையிலே இது சாத்தியமா என சந்தேகப்பட வைக்கும் ஒழுங்கு. இது போன்ற ஒரு கனவு சமூகத்தின் அடியில் உள்ள பண்பாடும், அந்த பண்பாட்டில் இருந்து எழுந்து வரும் ஆன்மீகம் பற்றிய ஒரு தேடல் எனக்குண்டு. அந்த தேடல்களை எனக்குள்ளே தொகுத்து கொள்ளவே இந்த வலைதளம்.

ஏன் வேடிக்கை பார்ப்பவன்?
சிறு வயதில் இருந்து வேடிக்கை பார்பவனாகவே இருந்திருக்கிறேன். எங்கள் ஆச்சி வீட்டில் சாலயை ஒட்டி ஒரு பால்கனி உண்டு, பல மணி நேரங்கள் அங்கு அமர்ந்து சாலையில் காட்சிகள் மாறுவதை பார்த்து கொண்டிருந்திருக்கிறேன். சென்னையின் கடற்கரைகளில் தனியாக அமர்ந்து அங்கு வரும் மனிதர்களையும் அவர்களது முக அசைவுகளையும் அவதானனிப்பது மிகபிடித்த பொழுதுபோக்கு. ஜப்பான் வந்த பின்பு அது இன்னும் அதிமாகி விட்டது. ஜப்பான் இது போன்ற தனிமை விரும்பிகளை கொண்டாடும் நாடு. உலகம் முழுவதும் சென்று வேடிக்கை பார்க்க வேண்டும் என்பதே எனது வாழ்நாள் ஆசை.

