காலமற்ற பெருவெளி. விண் என்றும் மண் என்றும் ஏதுமற்ற வெளி, ஆண் என்றும் பெண் என்றும் பிரிவினையற்ற வெளி, ஒற்றை குழம்பாய் கொப்பளித்து கொண்டிருந்த வெளியில் இருந்து ஒரு வெடிப்பு நிகழ, விண்ணுலகமும் மண்ணுலகமும் மேலும் கீழுமென பிரிந்து சென்றன. அடர்ந்த தனிமை கொண்டிருந்த விண்ணுலகத்தில் “மண்” என ஒரு பிரஞ்ஞை எழுகிறது. அந்த பிரஞ்ஞை தரும் விழிப்பிலிருந்து அமெநோமினாகனுஷிகமி , விண்ணை ஆட்சி செய்யும் தெய்வம் பிறந்தது. அவனென்றும் அல்லாமல் அவளென்றும் அல்லாமல் பிரஞ்ஞை மட்டுமேயான “அது” முதல் மூதாதை.
விண்ணின் முதல் தெய்வமான அதன் ஊழ்க வெளியில் பிறப்பு என்னும் ஒரு எண்ணம் எழுகிறது. அவ்வெண்ணத்திலிருந்து இருந்து தகாமிமுசுபிகமியும் , கமிமுசுபிகமியும் பிறந்தெழுகின்றன. உருவற்ற இவை பிறப்பாற்றலுக்கான தெய்வங்கள். விண்ணிலிருந்து இத்தெய்வங்கள் மண்ணுலகத்தை பார்க்கின்றன.
முதல் தெய்வம் “கடல் மட்டுமே கொப்பளித்து கொண்டிருக்கிறது, நிலமென்றே ஒன்று இல்லை, அனைத்தும் உருகி ஊத்தும் குழம்பு போல ததும்பி கொண்டிருக்கிறது. நிலமில்லாமல் உயிர்களில்லை , மண் இறுகாமல் பிறப்பு சாத்தியமில்லை ” என தன்னுள்ளே நினைத்து கொண்டது.
“ஆமென” மற்ற தெய்வங்களும் அதை ஆமோதித்தது.
சொல்லற்ற வெளியில் அவர்களது நினைப்பே போதுமானதாக இருந்தது அவற்றிலிருந்தே அடுத்தடுத்த தெய்வங்கள் பிறந்து வர ஆரம்பித்தன. முதலில் பிறந்தது புல்லின் தெய்வம், உமாஷிகாபிஹிகோஜிகமி. மூதாதையர்களே புல்லை போல செழித்து வளர கூடியது வேறொன்றில்லை , மண் இறுகி நிலம் உருவானால், அந்நிலத்தை நிறைத்து செழித்திருப்பேன் என்று உறுதி தந்தது. மண்ணுலகத்துக்கான நிலம் உருவாகும் முன் விண்ணுலகதிர்க்காண நிலம் உருவாக வேண்டும், அந்த வேலையை என்னிடம் விடுங்கள் என சூளுரைத்து பிறந்து வந்தது அமெநோதோகோதச்சிகமி.
மண்ணுலகத்தின் ஆஸ்திவாரமாக நானிருப்பேன் மூதாதாயர்களே என பிறந்தது குனிநோதோகோதச்சிகமி. புல்லின் தெய்வமே நானன்றி நீ செழித்து வளர முடியாது. உனக்கு தேவையான நீர் சக்தியை மழையாக பொழியும் மேகங்கள் நான், என்னையும் பிறக்க அனுமதிக்க வேண்டுமென டோயோகுமோனோநோகமி பிறந்தெழுந்தது. மூதாதாயர்களே பிறப்பென்பதே உங்கள் நோக்கமென்றால் ஒற்றை தெய்வங்கள் மட்டுமே போதாது, பிறப்பு நிகழ வேண்டுமென்றால் இரு வகை ஆற்றல் தேவை. அவை ஒன்றுக்கொன்று மோத வேண்டும், தவித்து களிக்க வேண்டும், வலியில் எம்பி குதிக்க வேண்டும், அவ்வாறே பிறப்பு நிகழ முடியுமென ஒரு குரலெழுந்தது .
ஆம் அவ்வாறே என தெய்வங்கள் ஆமோதிக்க, உஹிஜினி என்னும் ஆணும் சுஹிஜினி என்னும் பெண்ணும் பிறந்தார்கள். மணல் தெய்வங்களான இவர்கள் இனி உருவாக போகும் நிலத்தின் மணலை ஆள்வார்கள். அதற்குபின் சுணுகுய் மற்றும் இகிகுய் என்னும் தெய்வங்கள். விதையிலிருந்து உயிரை நிலத்தின் மேல் தள்ளும் தெய்வங்கள். பின்பு ஓடோநோஜி மற்றும் ஓடோநோபெ. உடல்களையும் அவ்வுடல்களில் இருந்து அடுத்தடுத்த உயிர்கள் உருவாகுவதற்கான துவாரங்களை ஆளும் தெய்வங்கள். உயிர்குலங்களின் தலைமுறைகளை தழைத்து ஓங்க செய்பவை. உடல் என்று ஒரு அமைப்பு இருந்தால் அதற்கு அழகென்று ஒன்று வேண்டாமா, எங்களிடம் அந்த வேலையை விட்டு விடுங்கள் என பிறந்தவர்கள் ஒமோதறுநோகமி மற்றும் அயாஷிகோனேநோகமி. ஒமோதறுநோகமி என்னும் ஆண் தெய்வம் உடலை முழுமை பெற செய்தது, முழுமையே அழகென்றது. அயாஷிகோனேநோகமி முழுமையில் இருக்கும் அழகை உணரச்செய்தது.
உயிர்குலம் உருவாகி தழைத்தோங்க தேவையான அனைத்து தெய்வங்களும் பிறந்தாகி விட்டது இனி என்ன உயிர்குலங்களை படைத்து உலகத்தை நிரப்பி விட வேண்டியது தான் என தெய்வங்கள் நினைத்தாலும் பிறப்பு நிகழாமல் விண்வெளியில் பேரமைதி நிலை கொண்டது. மூதாதாயர்களே ஏன் இந்த அமைதி, உயிர் உருவாக இன்னும் என்ன தேவை என தெய்வங்கள் தடுமாற, முழு முதல் தெய்வம் பதிலளித்தது, இன்னும் ஒன்று தேவை அது இல்லாமல் உயிரெழ முடியாது, “விழைவு” .
“விழைவு” முழு முதல் தெய்வமான அமெநோமினாகனுஷிகமியின் குரல் விண்ணுலகம் எங்கும் எதிரொலிக்க அச்சொல்லின் ஆற்றலில் இருந்து உயிர்பெற்று இசாநகி என்னும் ஆண் தெய்வமும், இசாநமி என்னும் பெண் தெய்வமும் பிறந்தெழுந்தனர். “இசாநகி, இசாநமி இனி மண்ணுலகம் உங்களது, நிலம் உருவாக்கி உயிர் குலங்களை உருவாக்கி வாழ்வாங்கு வாழ வேண்டுமென ஆசீர்வதிக்கிறேன்”.
மூதாதையே “எங்களால் இவ்வளவு பெரிய வேலையை செய்ய முடியுமா என தெரியவில்லயே” என இசாநகி தயங்க.
மேலே பேச விடாமல் அமெநோமினாகனுஷிகமி “முடியும், விழைபவனே(இசாநகி), விழைபவளே(இசாநமி), நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் விழைவது மட்டுமே. துணைக்கு எனது வேலை வைத்து கொள்ளுங்கள். அமெநோநுபோகோ என்னும் இந்த வேல் உங்களுக்கு வழி காட்டும்” என ஆணையிட்டார்.
முழு முதல் தெய்வமான அமெநோமினாகனுஷிகமி ஆணைக்கு ஏற்ப விழைபவனும், விழைபவளும் விண்ணுலகத்தை மண்ணுலகுடன் இணைக்கும் “அமெநோஉகிஹஷி” எனப்படும் மிதக்கும் பாலத்தை நோக்கி நடந்தனர். அப்பாலத்தின் நுனியில் இருந்து பார்த்தால் மண்ணுலகம் உப்பு கொதிக்கும் உளம் போல இருந்தது. திரவ நிலையில் இருக்கும் இந்த மண்ணுலகத்தில் எவ்வாறு நிலத்தை உருவாக்குவது என வருந்தினர்.
விழைபவள் தான் தன் முதல் விழைவை தொடங்கி வைத்தாள் “அன்பே, ஏன் நாம் இவ்வளவு யோசிக்க வேண்டும், இது என்ன மாதிரியான திரவம் என்று பார்த்து விட்டால் என்ன”
விழைபவன் “ஆம், ஆனால் அதை நாம் தொட முடியாது, நாம் பொசுங்கி இறந்து விடக்கூடும்”
“சரி தான், நாம் தொட வேண்டாம் மூதாதை அளித்த வேலால் தொட்டு பார்ப்போம்” என்று விழைபவள் அங்கு என தன் கையை காட்ட.
விழைபவன் அவள் நீட்டிய திசையில் அழகிய கற்கள் பதிக்கபட்ட அந்த வேலை திரவத்தில் நுழைத்து ஒரு சுற்று சுற்றினான், திரவித்தில் இருந்து உப்புகள் விலகி “கோரோ கோரோ” என்ற ஒலி எழுந்தது.

ஒலி எழவும் வேலை வெளிய எடுத்த விழைபவன் அந்த வேலில் இருந்து உப்பு துகள்கள் சொட்டுவதை கவனித்தான். அந்த உப்பு சொட்டுகள் மெதுவாக இறுகி ஒரு நிலம் உருவாகியது, வளைந்த மணி வடிவான நிலம். விழைபவனும் விழைபவளும் தங்கள் உருவாக்கிய முதல் நிலம் நோக்கி மகிழ்ந்தனர்.
விழைபவள் “அன்பே இந்நிலம் நமது முதல் குழந்தை , அவனாகவே உருவான குழந்தை, அதனால் இவனுக்கு தாந்தோணிதீவு என்று பெயரிடுவோம்”
“ஆம் இவன் தாந்தோணி, இவனது பெயர் ஓனோகோரோஷிமா” என இசாநகியும் இசாநமியும் அங்கு தரையிறங்கினர்.

இசாநகி “முதல் தெய்வம் ஆணையிட்டது போல இன்னும் நிறைய மைந்தர்களை நாம் பெற வேண்டும். ஆனால் இவனை போல தாந்தோணிகளை இனி பெற முடியாது என நினைக்கிறேன். நாமே எப்படி மைந்தர்களை பெற முடியுமென தெரியவில்லை”
அப்பொழுது தான் இசாநமி கவனித்தாள். “அன்பே, எனது உடலில் ஒரு பகுதி குழியாக உள்ளது”
இசாநகி “அப்படியா , எனது உடலில் ஒரு பகுதி நீளமான மேடாக உள்ளது”
இசாநமி “அப்படியென்றால் உனது மேடான பகுதியை எனது பள்ளத்தில் நிரப்பினால் மைந்தர்களை பெற முடியுமென நினைக்கிறேன்”
“ஆம் சரி தான், அப்படி தான் இருக்கவேண்டும். இல்லையென்றால் தெய்வங்கள் நம்மை இப்படி படைத்து இருக்க முடியாது. அதற்குமுன் நாம் சில சடங்குகளை செய்ய வேண்டியுள்ளது. அதற்கு நமக்கு ஒரு வழிபாட்டிடமும் ஒரு வீடும் தேவை. நிலம் உருவாகியதை விண்ணுக்கு தெரிவிக்கும் வகையிலும் இனி நாம் விண்ணுலகத்திற்கு தொடர்பு கொள்ளும் வழியிலும் இங்கு ஒரு தூணை அமைப்போம். அந்த தூணில் சடங்குகளை செய்த பின் நாம் அடுத்தடுத்த நிலக் குழந்தைகளை பெற்றெடுப்போம்” என்று இசாநகி அடுத்த கட்ட வேலைக்கு தயாரானான்.
இசாநமியும் ஆமோதிக்க இருப்பதிலேயே உயரமான தேவதாரு மரத்தை தூணாக நட்டினர். அதை அமெநோமிஹாஷரா என்று அழைத்தனர். நடு மரம் ஒன்றை நட்டி, அதை சுற்றி மரங்களை அடுக்கி யாஹீரோடோணோ என்னும் வீடும் கட்டிக்கொண்டனர். அனைத்தும் தயாராகி விட்டது, இனி சடங்குகளை தொடர வேண்டியது தான்.
இசாநகி “நான் தூணில் இடது பக்கம் செல்கிறேன், நீ வலது பக்கம் செல், நாம் சந்திக்கும் இடத்தில் சடங்கு முடியும் அதன் பின் நமது உடல்களை இணைத்து கொள்ளலாம்”
இருவரும் சுற்றி வந்து சந்திக்கும் இடத்தில் இசாநமியின் விழைவே தொடக்கத்தை நிகழ்த்தியது. “எனது அன்பு இசாநகி , விழைபவனே…. எனது பள்ளத்தை நிறைத்து வீடு அன்பே”
சில மாதங்களில் இரு நிலக் குழந்தைகள் பிறந்து. ஒன்று கலைந்து போன புழுவை போலவும், இன்னொன்று எளிதில் கரைய கூடிய நுரையாகவும் வடிவம் கூடி வாராதவையாக இருந்தன. வேறு வழியின்றி அவர்களை கடலில் செலுத்தி விட்டு, இசாநகியும் இசாநமியும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
இசாநகி “எங்கேயோ தவறு நடந்திருக்கிறது. இதற்கு மேல் நமக்கு திறன் போதாது, மூதாதைகளை கேட்பதே ஒரே வழி” என்றான்.
இசாநமியும் ஆமோதிக்க மரத்தூண் வழியாக விண்ணுலகம் சென்று மூதாதையர்களிடம் தங்கள் வேதனையை தெரிவித்தனர். கடந்த காலத்தை திருப்பி பார்க்க மூதாதாயர்கள் ஃபுடோமானி சடங்கை செய்ய வேண்டியிருந்தது. செர்ரி மர கிளையில் தீயெழுப்பி அதை வைத்து ஒரு மானின் எலும்பை பற்ற வைத்தனர். எலும்பில் எழும் விரிசல்களை வைத்தே நடந்ததை கண்டறிந்தனர்.
விழைவின் செல்வங்களே “விழைபவள் முதலில் பேசியிருக்க கூடாது, அதுவே தவறு” என முழு முதல் தெய்வங்கள் கர்ஜித்து மறைந்து போயின.
இசாநகிக்கு புரிந்து போனது. இசாநமியை அழைத்து “அன்பே மீண்டும் ஒருமுறை திருத்தூணை சுற்றி வருவோம், இம்முறை நீ எதுவும் பேச வேண்டாம், நானே ஆரம்பிக்கிறேன்”
சுற்றி வந்த பின் இசாநகி “அன்பே அழகே இசாநமி உனது பள்ளத்தை நிரப்ப என்னை அனுமதிப்பாயா”. ஆமென அவள் ஆமோதிக்க அதற்கு பின் எட்டு தீவுகள் குழந்தைகளாக பிறந்தன. ஆவாஜி , இயோ எனப்படும் ஷிகொகு, ஒகி, சுகுஷி எனப்படும் கியுஷு , இக்கி , சு, சதோ , கடைசியாக யமாடோ எனப்படும் ஹோன்ஷூ. எட்டு தீவுகளின் நிலம் என்பதால் ஓயாஷிமாநோகுனி என அதற்கு பெயரிட்டு கொண்டனர்.
இது தான் ஜப்பானின் முதல் காவியமான கொஜிகி சொல்லும் ஜப்பானிய நிலம் உருவான புராணம். கொஜிகி பொ. ஆ 681 பேரரசர் தென்மு வின் ஆனைக்கேற்ப தொகுக்க ஆரம்பிக்கபட்டு பொ. ஆ 712 இல் பேரரசி கென்மெய் அவர்களது ஆட்சி காலத்தில் முடிக்க பட்டது. ஹிஎதாநோஅரே என்னும் ஞாபக சக்தி அதிகமுள்ளவரால் (இவர் ஆணா பெண்ணா என்பது இது வரை தெளிவாகவில்லை) ஜப்பானின் வரலாறு முழுவதும் ஒப்பிக்கப்பட்டு ஓநோயசுமாரோ வால் எழுதி தொகுக்கப்பட்ட நூல் இது. ஒரு அரசு தன் நிலத்துக்கான புராண வரலாற்றை தொகுக்க ஆணையிட்டு இருக்கிறதென்றால் அன்றுள்ள மக்களின் ஆதரவை பெற்ற ஒற்றை மணிமுடி கொண்ட அமைதி ஆட்சியை நிலை நாட்டிய அரசே அதை செய்ய முடிந்து இருக்குமென நினைக்கிறேன். தன் வரலாற்றை தொகுக்கும் அளவுக்கு ஜப்பானின் அரசு எப்படி முன்னேறியிருக்க முடியும்?
மேலும்..

