1986 இல் கியுஷு தீவில் உள்ள சகா மாகாணத்தின் யோஷிநோகரி நகரத்தில் தொழில் பூங்கா அமைப்பதற்கான திட்டம் அறிவிக்கபட்டு அதற்காக மண்ணை சமன்படுத்தும் வேலை ஆரம்பிக்கபட்டது. ஆரம்பகட்ட வேலையில் தற்செயலாக சில குழிகளும் மண்பாண்டங்களும் கிடைக்க, வரலாற்றுக்கான அகழ்வாராய்வு நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கபட்டது. இது வரை இருந்தது போல சிறு பொருள்களே கிடைக்க போகிறது என அவநம்பிக்கையில் ஆரம்பித்தாலும் , ஈமசடங்குகளுக்கு பயன்படுத்த பட்ட முதுமக்கள் தாழிகள் கொத்து கொத்தாக கிடைத்ததும் அகழ்வாராய்வு தீவிரம் கொண்டது. ஊடகங்களும் சீன பதிவுகளுக்கான தொல்லியல் தரவுகள் கிடைத்து விட்டதாக இச்செய்தியை பெரிதாக்கி ஜப்பான் எங்கும் ஒளிபரப்ப அரசின் கவனமும் குவிந்து, தொழில் பூங்கா திட்டம் முழுதாக கைவிடபட்டு பாதுகாக்கபட்ட தொல்லியல் தளமாக அறிவிக்கபடுகிறது. அதன்பின் பத்தாண்டுகளுக்கு மேலாக அகழ்வாராய்வு தொடர, 2001 இல் 290 ஏக்கர் பரப்பளவில் இந்த தளம் ஒரு அருங்காட்சியமாக பொது மக்கள் பார்வைக்கு திறக்கபட்டது.
யோஷிநோகரி தளத்தை நேரில் காணும் வாய்ப்பு அமைந்ததால் அந்த படங்களையும் இக்கட்டுரையில் பகிர்ந்து கொள்கிறேன். யோஷிநோகரி முழு அளவில் செயல்பட்டு கொண்டிருந்த ஒரு யயோய் நகர குடியிருப்பை நாம் கண்முன்னே கொண்டு வருகிறது. இந்த யோஷிநோகரி நகரில் மட்டும் ஏறத்தாழ ஆயிரம் பேர் வாழ்ந்திருக்கலாம் என்றும், சுற்றியுள்ள இது போன்ற சிறு நகரங்களை இணைத்து ஐயாயிரம் பேர் கொண்ட சிறு நாடு ஒன்று உருவாகி அதற்கு இந்த யோஷிநோகரி தலை நகரமாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இத்தளத்தில் யயோய்களின் மூன்று கால பொருள்களும் கிடைப்பதுடன் ஒவ்வொரு காலத்திலும் இந்த சிறு நாடு எவ்வாறு வளர்ந்து வருகிறது என்ற சித்திரமும் தெளிவாக கிடைக்கிறது.
உலகத்தில் உள்ள பெரும்பாலான ஆதி நாகரீகங்களில் காணப்படுவது போலவே இந்நகரமும் ஆற்று படுகையிலே கட்டமைக்க பட்டிருக்கிறது. யோஷிநோகரி நகரம் தெற்கு கிராமம் வடக்கு கிராமம் என இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கபட்டுள்ளது. தெற்கு கிராமத்திற்குள் உழைக்கும் மக்களுக்கான குடியிருப்பு ஒருபுறமும் ஆட்சியாளர்களுக்கான குடியிருப்பு மறுபுறமும் என அமைந்து தெளிவான சமூகப் படிநிலையை காட்சி படுத்துகிறது. தெற்கு கிராமத்தை ஒட்டி வயல்கள், பொருள் பண்டமாற்றுக்கான சாவடிகள், பட்டு மற்றும் துணி நெய்யும் சிறு தொழிற்சாலைகளும் இருக்கின்றன. வடக்கு கிராமம் சடங்குகள் மற்றும் விழாக்களுக்கான பொது இடமாக இருக்கிறது. வடக்கு கிராமத்தை கடந்த எல்லை புறத்தில் இடுகாடு அமைந்துள்ளது.
யோஷிநோகரி நகரத்தின் எல்லை புறம் முழுவதும் அகழிகள் வெட்டப்பட்டுள்ளது. அகழிகள் சிறந்த தற்காப்பு முறையாக கருதப்படுவதால் , இந்த நாடு எதிரிகளை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகளை தயார் செய்திருப்பதை நாம் காண முடிகிறது. வெறும் அகழிகள் மட்டுமல்லாமல் நுழைவாயில் அருகில் கூர் தீட்டபட்ட மரங்களை நட்டு வைத்து ஒரு வேலியும் உருவாக்க பட்டிருக்கிறது. இந்த வெளிப்புற தற்காப்பு அமைப்பே இங்கு ஒரு நாடு போன்ற ஒரு பெரு நிறுவனம் செயல்பட்டதற்கான தெளிவான சான்றுகள்.

Source : Photo of exhibits in Yoshinogari Historical Park
தெற்கு கிராமத்தில் விவசாயத்தில் ஆரம்பித்து , பட்டு உற்பத்தி, துணி நெய்தல் என்னும் பெரு தொழில்கள் நடந்திருக்கிறது. இத்தொழில்கள் நடத்த தேவைப்படும் கருவிகள் செய்யும் தொழிற்சாலையும் இருந்திருக்கிறது. தீ எழுப்பும் கருவி ஒன்று கூட அகழ்வில் கண்டுபிடிக்க பட்டுள்ளது. அகண்ட மரத்திலிருந்து சிறு படகுகள் செய்யபட்ட தடங்களும் உண்டு. இசை கருவிகள் செய்யும் தொழிற்சாலை ஒன்றும் செயல்பட்டிருக்கிறது. கிராமத்திற்கான சடங்குகளுக்கு இசைகருவிகள் தேவை பட்டிருக்கலாம். என்னை கவர்ந்த இசைக்கருவி சுசிபுயே எனப்படும் சிறு குழல்கள். மண்ணால் செய்யப்பட்ட முட்டை வடிவில் இருக்கும் இந்த கருவி, கைக்குள் அடங்குமளவுக்கு சிறியதாக இருக்கிறது. சிறு துளைகள் வாயில் வைத்து ஊதுமாறு அமைக்கபட்ட இந்த குழல் கிப்லியின் புகழ்பெற்ற அணிமேவான “My neighbor totoro” வில் இந்த குழல் பல காட்சிகளில் வாசிக்கபடும். பண்டைய காலத்து பொருள்களை நிகழ் காலத்தில் உலவ செய்வது ஜப்பானியர்களுக்கு கைவந்த கலை.

Source : Photo of exhibits in Yoshinogari Historical Park
இதற்கு இன்னொரு உதாரணமும் சொல்லி விடுகிறேன். இந்த தொல்லியல் தளத்தில் ஆங்காங்கு இந்த சிவப்பு மலர்கள் தென்பட்டன. அர்த்தமில்லாமல் இந்த மலர்கள் இங்கிருக்காது என்று தோணிகொண்டே இருந்தது. அவற்றை படமெடுத்து அங்குள்ள ஊழியரிடம் கேட்போம் என்று கேட்டு பார்த்தேன். இந்த பூ “Red spider lilly” வகையை சேர்ந்தவை, தமிழில் செவ்வல்லி என்று அழைக்கலாம் என்று நினைக்கிறேன். இந்த செவ்வல்லியின் உள்ளே விஷம் நிறைந்திக்கிறது என்பதால் இவற்றை பயிர் காவலுக்காக வயலில் யயோய்கள் நட்டு வைத்திருகின்றனர். வெறும் பூவென இல்லாமல் பூச்சிகளிடம் இருந்தும் சிறு மிருகங்களிடம் இருந்தும் பயிர்கள் சேதமாகமல் காத்தருளிய முக்கிய கருவி. இவை மகரந்த சேர்க்கையினால் பூப்பவை அல்ல, விதைகளை நட்டு வைத்தால் மட்டுமே பூக்க கூடியவை. ஆகவே சீன அல்லது கொரிய நிலத்திலிருந்து யயோய்கள் தங்களது விவசாய தேவைகளுக்காக கொண்டு வந்திருக்கலாமேன என்று அவர் விளக்கினார். ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்னான ஒரு மலர், வெறும் அழகுபொருளென இல்லாமல் யயோய்களுக்கு பயன்படும் ஒரு தொழில்நுட்பமாகவும் இருந்திருக்கிறது, அதை இந்த அருங்காட்சியகத்தில் கொண்டு வந்து வைத்தால் பொருத்தமாக இருக்குமென நினைத்த அருங்காட்சியக ஊழியர்களின் மனத்தை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. இதை தெரிந்து கொண்டபின் தான் கவனித்தேன் கியுஷு பகுதியில் இன்றுமே வயல்களுக்கு அருகில் இந்த செவ்வல்லிகளை பார்க்க முடிகிறது.

Source : Photo of exhibits in Yoshinogari Historical Park
யோஷிநோகரியில் பண்டைய யயோய்களின் பள்ள வீடுகள் பார்வைக்கு வைக்க பட்டுள்ளது. கூரைகள் தரையோடு ஒட்டி இருப்பதை போல வடிவமைக்கப்பட்ட இந்த வீடுகள் உள் நுழைந்ததும் நான்கு படிகள் இறங்கி அறைக்கு செல்லும் படி அமைந்துள்ளது. அறையின் நடுவே நெருப்பெழுப்ப சிறு குழியும், ஓரங்களில் சிறு அலமாரி ஒன்றும், உட்கார சிறு திண்டு ஒன்றும் இருக்கிறது. தலைவர்கள் உட்பட அனைவரது வீடுகளும் ஒன்று போலவே இருக்கிறது என்றாலும், வீடுகளுக்குள் வைக்கபடும் பொருள்களில் இருந்து அவர்களின் சமூக இடங்களை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. விவசாய தொழிலாளர்கள் வீட்டில் மண்பாண்டங்கள் மற்றும் கல் அரிவாள்கள், இராணுவ தளபதிகள் வீட்டில் வில் அம்புகள் மற்றும் பாதுகாப்பு கவசம், “ஓ” எனப்படும் அரசர் வீட்டில் அலங்கார மணிகளும், சீனாவில் இருந்து வந்த ஆடிகளும் அணிவகுக்கின்றன.

Source : Photo of exhibits in Yoshinogari Historical Park

Source : Photo of exhibits in Yoshinogari Historical Park
வீடுகள் பள்ளமாக அமைக்கபட்டாலும் பயிர்கள் சேமிக்கபடும் கிடங்குகள் தூண்கள் நடப்பட்டு மண்ணில் இருந்து எழுப்பி கட்டபட்டு இருக்கிறது. மிக கவனமாக பயிர்களை சேமித்து வைப்பதை பார்க்கும் போது அவற்றின் முக்கியதுவத்தை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

Source : Photo of exhibits in Yoshinogari Historical Park
யோஷிநோகரியின் தெற்கு பகுதி அதிகார வர்க்கத்திற்கு மட்டுமான பகுதி, இங்கு நான்கு முனைகளிலும் பெரிய காவல் கோபுரங்கள் எழுப்பபட்டு இருக்கிறது. இங்கு “ஓ” எனப்படும் அரசரும் அவரது குடும்பத்தாரும் அவரது இராணுவ தளபதிகளும் தங்கியிருக்கின்றனர். சேமிப்பு கிடங்குகள் , காவல் கோபுரங்கள் என தரைக்கு மேல் இவ்வளவு பெரிய கட்டுமானங்கள் எழுப்ப தெரிந்திருந்தும் அதிகார வர்கத்தின் வீடுகள் கூட பள்ளங்களிலே நீடிப்பது விந்தை தான். ஒரு வேலை வீடுகளை மேலெழுப்புவது தெய்வங்களை அறைகூவும் செயலாக கருதபட்டிருக்கலாம்.

Source : Photo of exhibits in Yoshinogari Historical Park
பல வகையான அலங்கார மணிகள் அகழ்வில் கிடைக்கிறது. மகாதமா எனப்படும் வளைந்த மணிகள் , குதாதமா எனப்படும் கண்ணாடியால் செய்யப்பட்ட உருளை மணிகள். மகாதமா கற்களில் இருந்து இழைத்து உருவாக்கபட்டதற்கான தடங்களும் கிடைத்திருக்கிறது. குதாதமா உருவாக்கும் தொழில்நுட்பம் அன்றைய ஜப்பானில் இல்லை என்பதால் இவை சீனாவில் இருந்து வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவை கழுத்தில் தொங்கவிடப்படும் ஆரங்களாகவும், நெற்றியில் அலங்காரமாகவும் வீற்றிருந்து இருக்கலாம். இந்த அலங்கார பொருள்களை அனைவரும் அணிந்திருக்க முடியாது , இவை அதிகார பொறுப்பில் உள்ளவர்களுக்கானதாக மட்டுமே இருந்திருக்கவேண்டும்.
இக்குடியிறுப்பின் நுழைவாயிலில் ஷின்டோ கோயில்களில் இருக்கும் தொரி எனப்படும் நுழைவாயில்கள் அமைக்கபட்டுள்ளது. தொரி வடிவங்கள் மிக பிற்காலத்தில் ஷின்டோ ஒற்றை மதமாக திரண்ட பின்னே உருவாகி வந்தது, மூன்றாம் நூற்றாண்டு காலத்தில் இருந்திருப்பதற்கான வாய்ப்பு மிக குறைவு. இதைபற்றி அங்குள்ள ஊழியரிடம் கேட்ட போது இந்த தொரி நுழைவாயில்கள் அகழ்வில் கிடைக்க பெற்றவை அல்ல என்பதை தெளிவு படுத்தினார். அதிகார வர்க்கத்தின் குடியிருப்பு என்பதால் அலங்காரம் செய்யபட்ட நுழைவாயில் இருந்திருக்கலாம் என்ற அனுமானத்தில் இந்த தொரி வைக்கபட்டிருக்கிறது என்றார். ஆனால் இந்த தொரி நுழைவாயில்களுக்கு மேல் காணப்படும் மரத்தாலானா பறவை சிற்பங்கள் இங்கு அகழ்வில் பெறபட்டவை என்று தெளிவு படுத்தினார்.

Source : Photo of exhibits in Yoshinogari Historical Park
இந்த தொரி நுழைவாயில்கள் ஆறாம் நூற்றாண்டிற்கு பின்னர் ஜப்பானியே ஷின்டோ கோயில்களில் தென்பட ஆரம்பிக்கின்றன. பௌத்தம் ஜப்பானிற்கு நுழைந்த பிறகு என்பதால் இவை பௌத்த தோரணத்தின் தொடர்ச்சியாக இருக்கலாம் என்பது தான் பெரும்பான்மையானவர்கள் நம்பும் வரலாற்று சித்திரம். அதே சமயம் ஜப்பானிய மொழியில் இந்த தொரி நுழைவாயில்களை 鳥居 என்ற சித்திர சொல்லால் குறிப்பிடுகின்றனர். இதில் 鳥 என்பது பறவைகளை குறிக்கிறது,居 என்றால் இருப்பிடம். பறவைகளின் இருப்பிடம் என்பதே இதன் பொருள். ஷின்டோ மதத்தில் ஆதி காலம் முதலே பறவைகள் தெய்வங்களுடன் தொடர்பு கொள்ளும் முக்கிய மெய்யியல் அடையாளங்களாக போற்றபட்டு வந்திருக்கிறது. யோஷிநோகரியில் இந்த பறவை சிற்பங்கள் கிடைப்பதை பார்க்கும் போது தெய்வங்கள் வாழும் இருப்பிடங்களின் நுழைவாயிலில் பறவைகள் அமரும் வகையில் இந்த தூண்களை அமைத்ததால் தொரி என்ற பெயர் அமைந்திருக்கலாம் என்றும் தோன்றுகிறது. அவ்வகையில் இந்த தொரி நுழைவாயில்கள் பௌத்தம் வரும் முன்னே இருந்திருக்கலாம் என எனக்கு படுகிறது. இது என்னுடைய அனுமானம் மட்டுமே, வரலாற்று சான்றுகள் என இது வரை எதுவும் கண்டுபிடிக்க படவில்லை.
யோஷிநோகரியில் சுற்றி வந்த போது உற்பத்தி மற்றும் தொழில் சிறப்பாக நடந்து கொண்டிருக்க, அதிலிருந்து வரும் உபரியை காக்க ஒரு அதிகார வர்க்கம் எழுந்து வரும் சித்திரத்தை தெளிவாக காண முடிகிறது. வெறும் தொழில் சார்ந்து மட்டும் இயங்காமல் அலங்கார பொருள்கள், இசை மற்றும் நடனம் உட்பட்ட கலை என்று ஒரு அமைதியான நகரமாக யோஷிநோகரி இருந்திருப்பது ஒரு தோற்றம் எழுகிறது. ஆனால் இவை மட்டுமல்ல குரூரமான போர் பூசல்களின் அடையாளங்கள் நிறையவே அகழ்வில் வெளிவந்திருக்கிறது.

