மகாதமா: அரியணை – 3

யோஷிநோகரி தொல்லியல் தளத்தில் கிடைக்கும் பொருள்களை வைத்து “கிஷிவாஜின்தென்” இல் இருக்கும் இலக்கிய குறிப்புகளை சரிபார்த்து கொள்ள முடிகிறது. “கிஷிவாஜின்தென்” குறிப்பிடுவது போல பெரும் பூசல்கள் நடந்ததற்கான பல தடயங்கள் கிடைக்க பெறுகிறது.

இந்த பகுதியில் பெருமளவில் ஈமத்தாழிகள் அகழ்வில் கண்டெடுக்கபட்டது. படுக்கவைக்கபட்ட ஈமத்தாழிகள் ஒரு ராட்சச சக்கரவள்ளி கிழங்கை போல காட்சியளிக்கிறது. முனைகள் கூம்பி போயிருக்கும் உருளைகள் இரண்டு அதன் அகண்ட வாய் பகுதி ஒட்ட வைக்கபட்டு இவ்வகை தாழிகள் உருவாக்க பட்டிருக்கிறது. இந்த வகையிலான ஈமத்தாழிகளை செய்வதற்கும் இதில் இறந்தவர்களை புதைப்பதற்கும் பெரிய உழைப்பு தேவைப்பட்டிருக்கும். முதலில் மேலிருந்து கீழாக பள்ளம் தோண்டி அதன்பின் தாழியின் கூம்பிய முனையை சொருகும் அளவுக்கு பக்கவாட்டில் ஒரு பள்ளம் தோண்டபடுகிறது. அதற்குள் இறந்தவர்களை சற்று முட்டியை மடித்தவாறு அமர வைத்து, இன்னொரு பாதி தாழியை அவர்களது தலை பொருந்துமாறு மூடி விடுகின்றனர். இரு தாழிகளையும் களிமண்ணை வைத்து ஒட்டி விடுகின்றனர். அதன்பின் பள்ளத்தை மூடி, அங்கு ஒரு சிறு மேடு உருவாக்க படுகிறது.

Instructional poster illustrating the steps for preparing a burial site, featuring cartoon drawings of people digging, placing a body, and covering the grave.
அருங்காட்சியகத்தில் இருந்த விளக்கபடம்
Source : Photo of exhibits in Kasugashi Okamoto Historical Park

இது போன்ற தாழிகள் பெரும்பாலும் கொத்து கொத்தாக தான் கிடைக்கிறது. அந்த நகரம் தங்களுக்கென ஒரு இடுகாடு அமைப்பை உருவாக்கியிருந்ததும் அதற்கான சடங்கு முறைகள் தெளிவாக வகுக்கபட்டிருந்ததை இதிலிருந்து நாம் காண முடிகிறது.

Aerial view of a spiral staircase overlooking a circular area featuring ancient pottery and earthy textures.
கொத்து கொத்தான ஈமத்தாழிகள்
Source : Photo of exhibits in Kasugashi Okamoto Historical Park

தாழிகளில் புதைக்கும் போது அந்த மனிதரின் சமூக இடத்திற்கு ஏற்ப பல வகையான பொருள்களை தாழிகளுக்குள் வைத்து சடங்குகளை நடத்தி இருக்கின்றனர். பெரும்பாலும் சீனாவில் இருந்த வந்த ஆடிகள், மணிகள், வாள்கள். மனிதர்களை புதைக்கும் முன் உடலின் மேல் சிவப்பு நிற மை ஒன்று பூச பட்டிருக்கிறது. பாதரசமும் கந்தக அமிலமும் கலந்த ஒரு வகையான எரிமலை பாறைகளில் இருந்து பெறப்படும் இந்த மையின் ஆரஞ்சு கலந்த சிவப்பு நிறத்தை ஜப்பானிய மொழியில் ஷுஇரோ(Shuiro) என்கின்றனர். ஆங்கிலத்தில் Vermillion, தமிழில் செந்தூர நிறம் இதற்கு பக்கத்தில் வரக்கூடும். இன்றும் ஜப்பான் வந்தால் இந்த வெமிலியான் நிறத்தை நீங்கள் எங்கும் காண முடியும். பெரும்பான்மையான ஷின்டோ கோவில்களின் தொரி நுழைவாயில்கள் இந்த நிறத்தில் தான் இருக்கும். ஜப்பானின் சொந்த நிறம் என்றே இதை நான் சொல்வேன். இது ஆதி காலத்திலிருந்து வந்திருப்பது எனக்கும் ஆச்சரியமே. அந்த காலத்தில் இவை சடலங்கள் அழுகுவதை மிதபடுத்தும் அமிலங்களாக இருந்திருக்கலாம், அதுமட்டுமில்லாமல் இந்த வெமிலியான் நிறம் மறுபிறப்பை குறிக்கும் என்ற ஒரு நம்பிக்கையும் உண்டு. இவை சடலங்களில் இருந்து தாழிகளின் உட்பகுதியில் படிந்ததால் இன்று வரை அழியாமல் இருந்திருக்கிறது.

A display showing a cutaway diagram of an archaeological site, with labels identifying various components, such as structures and artifacts, placed beside a traditional pottery piece on a stand.
வெமிலியான் நிறம் பூசபட்ட ஈமத்தாழிகள்
Source : Photo of exhibits in Yoshinogari Historical Park

தாழிகளிலிருந்து பலவகையான வாள்கள் கண்டெடுக்க பட்டிருக்கிறது. வெட்டும் வாள்கள் மட்டுமல்லாமல் அலங்கார வாள்கள். அதிகார வர்க்கம் அடையாளத்திற்காக இந்த வகை வாள்களை அணிந்திருக்கலாம் என கருதப்படுகிறது. யோஷிநோகரியின் மீது ஊடக கவனம் குவிந்ததே ஒரு ஈமத்தாழியில் நீளமான வாளும் சீன மணிகளும் கிடைத்ததால் தான். வெறும் அலங்கார வாள் தான் என்றாலும் அதன் கைபிடியில் இருக்கு வேலைப்பாடுகளும் , அது ஒற்றை வாரப்பில் செய்யபட்டிருப்பதும் அன்றைக்கு சாதாரணமான தொழில்நுட்பம் இல்லையென்பதால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஜப்பானின் உயர் தொழில்நுட்பத்தில் செய்யப்பட்ட ஒரு வாளும் சீனாவில் இருந்து வந்த அருமணிகளும் ஒரு சேர கிடைப்பது, சமூக படிநிலையில் உயர்ந்த பதவியில் உள்ள ஒருவர் தான் இவற்றை அணிந்திருக்க முடியும் என்று கருதப்படுகிறது. அன்றிருந்த ஒரு சிறு நாட்டின் தலை நகரம் சீனாவின் ஆதரவை பெறாமல், சீனாவுடன் தொடர்பு வைத்திருக்காமல் தங்கள் அதிகாரத்தை நிலை நாட்ட முடியாது என்பதும் இதிலிருந்து தெளிவாகிறது.

An ancient artifact display featuring a bronze cross and blue artifacts arranged on a reddish-brown surface inside a circular stone structure.
வாளும் மணியும்
Source : Photo of exhibits in Yoshinogari Historical Park

தலை வெட்டபட்ட நிலையில் ஈமசடங்கு செய்யபட்டு புதைக்கபட்ட எலும்பு கூடுகள் , பல வகையான ஆயுதங்களால் குத்தபட்ட எலும்பு கூடுகள் கிடக்கிறது. யோஷிநோகரி அருங்காட்சியகத்தில் பத்து அம்புகள் வயிற்றில் பாய்ந்த ஒரு எலும்பு கூடும் பார்வைக்கு வைக்க பட்டுள்ளது. அம்புகள் மற்றும் வாள்கள் செய்வதற்கு தேவையான கல்லாளான வார்ப்புகள் நிறைய அகழ்வில் கிடைத்திருக்கிறது.

A photograph of a human skull fragment found in the ground, showing embedded arrowheads, displayed above a collection of stone arrowheads on a blue background with a descriptive plaque.
வயிற்றுக்குள் பாய்ந்த 10 அம்புகள்
Source : Photo of exhibits in Yoshinogari Historical Park

தொடக்க காலத்தில் கல் மற்றும் மரத்தாலான விவசாய கருவிகள் நடுக்காலத்தின் இறுதியில் உலோகங்களலான கருவிகளாக மாறுவதை காண முடிகிறது. உலோகத்தை உருக்கும் தொழில்நுட்பம் கருவிகள் மட்டுமல்லாது ஆயதங்களுக்கும் பயன்பட்டிருக்கவேண்டும். இவற்றை வைத்து தொடர்ச்சியான போர் பூசல்கள் நடந்திருப்பது தெளிவாகிறது. இதை மண்டை ஓட்டு ஆய்வுகளும் உறுதி செய்திருக்கிறது. ஜோமோன் கால மண்டை ஒடுகளை விட யயோய் கால மண்டை ஒடுகளில் அதிர்ச்சி ஏற்பட்டு உயிர் பிரிந்த தடங்கள் ஏராளமாக இருப்பதாக கண்டுபிடிக்க பட்டிருக்கிறது.

யோஷிநோகரியின் ஈமத்தாழிகளை பார்த்து வரும் போது உயர்ந்த ஒரு கட்டிடம் கண்ணில் பட்டது. அரசரின் வீடே பள்ளத்தில் இருக்கும்போது இவ்வளவு பெரிய கட்டிடத்தில் யார் இருந்திருக்க முடியும் என்று யோசித்தவாறு அந்த கட்டிடத்தை நோக்கி சென்றேன். மரபட்டைகளால் வேயப்பட்ட கூரைகளை கொண்ட மூன்றடுக்கு கட்டிடம். கோபுரத்தின் உச்சியில் கும்பம் போன்ற ஒரு அமைப்பு வைக்க பட்டிருந்தது. உள்ளே இருப்பவர்கள் தெரியாத வண்ணம் மர அரண்களால் மறைக்க பட்டிருந்தது.

A pathway by a grassy area leading to a traditional building with a thatched roof, under overcast skies.
மூன்றடுக்கு கட்டிடம்
Source : Photo of exhibits in Yoshinogari Historical Park

அகழ்வில் பதினாறு தூண்கள் சீரான இடைவெளியில் நடப்பட்ட தடங்கள் தெளிவாக இருந்ததால் இது போன்ற பல அடுக்கு கட்டுமானமே இங்கிருந்திருக்கும் என்ற அனுமானத்தில் இவை மறுகட்டமைப்பு செய்யபட்டுள்ளது. முதலில் கோவிலாகவோ வழிபாட்டு இடமாக இருக்கலாமோ என்று தான் எண்ணினேன், ஆனால் அங்குள்ள அறிவிப்பு பலகைகள் இந்த கட்டிடத்தை யோஷிநோகரி நகரத்தின் அதிகார மையம் என்று அடையாளபடுத்தியது. இரண்டாம் தளத்தில் அதிகார வர்க்கத்தினர் கூடும் சபை அமைக்க பட்டிருக்கிறது. விழா நாள், அறுவடை நாள், போர் சார்ந்த முடிவுகள் அனைத்தும் இங்கிருந்தே எடுக்க பட்டிருக்கிறது. மறைக்கபட்ட அரண்களும் , காவல் கோபுரமும் இந்த வளாகத்தில் அமைந்திருப்பதால் இங்கு அதிகார வர்க்கம் மட்டுமே நுழைந்திருக்க முடியுமென கருதப்படுகிறது. அரசரும் அதிகார வர்க்கமும் அமரும் இரண்டாம் தளத்திற்கு மேல் மூன்றாம் தளம் ஒன்று இருந்திருக்கிறது, அங்கிருந்தே ஆணைகள் வருவதாக அறிவிப்பு பலகைகள் சொன்னது.

A traditional meeting space featuring life-like mannequins dressed in historical clothing, arranged in a circular formation on a wooden floor. In the center, a table displays various bowls, with a backdrop of draped fabric and soft lighting.
இரண்டாம் தளத்தில் உள்ள அரச சபை
Source : Photo of exhibits in Yoshinogari Historical Park

ஆர்வத்துடன் மூன்றாம் தளத்திற்கு சென்று கண்ட போது அங்கு கமி எனப்படும் தெய்வங்களிடம் குறி கேட்டு சொல்லும் பூசாரியும் அவரது மெய்க்காவலர்களும் இருந்தனர். அரசருக்கு மேல் தெய்வம் தான் என்றாலும், அரசருக்கு தெய்வ அருளை கேட்டு சொல்வது பூசாரி , அதனால் அரசருக்கு ஆணையிடுமளவிற்கு பூசாரி அதிகாரத்துடன் இருந்திருக்கிறார். பெரும்பான்மையான பண்டைய நாகரீகங்களில் இந்த படிநிலை பேணப்படுவதை நாம் காணமுடியும். யோஷிநோகரி அருங்காட்சியாகத்தில் இந்த சித்திரம் தெளிவாக புரியும்படி பொம்மைகளை வைத்து காட்சி படுத்தியிருந்தனர். பொம்மைகளின் உருவம், அவர்கள் அணிந்திருக்கும் துணி, அவர்களின் முகபாவம் வரை மிக நுட்பமாக செதுக்க பட்டிருந்தது.

An interior of a traditional wooden structure featuring four seated figures dressed in light-colored robes, engaged in a ceremonial setting with a small altar and a tree, illuminated by soft overhead lights.
மூன்றாம் தளத்தில் உள்ள பூசாரியின் குறி கேட்கும் அறை
Source : Photo of exhibits in Yoshinogari Historical Park

யயோய்கள் காலத்தில் பெரும்பாலும் குறி கேட்கும் பூசாரிகள் பெண்களாகவே இருந்திருக்கின்றனர். ஆடிகள் பொருத்தபட்ட மரக்கிளைகள் தெய்வங்களாக உருவகம் செய்யபட்டிருக்கிறது. இன்றும் ஷின்டோ கோவில்களில் ஆடிகள் நடுபீடங்களில் வீற்றிருப்பதை நாம் காண முடியும். இந்த பெண் பூசாரிகள் செடி கொடிகளை அணிந்து கையில் மூங்கில் இலைகளை வைத்து கொண்டு, யாழ் போன்ற இசைக்கருவி இசைக்க கமியிடம் வேண்ட , கமி யின் சொற்களை ஒரு புதிர் போல உச்சரிக்கிறார்கள். இந்த புதிரை புரிந்து கொள்ள கூடியவர் மட்டுமே அவரை சுற்றி மெய்க்காவலர்களாக உட்கார முடியும். பூசாரி கூடு விட்டு கூடு பாய்ந்து உச்சரிப்பதை சுற்றியுள்ள மெய்க்காவலர்கள் ஆணைகளாக மாற்றி அரச சபையிடம் தெரிவிக்கிறார்கள். அரச சபை அதை எந்த மாற்றமும் இல்லாமல் நிறைவேற்றுகிறது.

இது போல “கிஷிவாஜின்தென்” சொல்லும் குறிப்புகளை யோஷிநோகரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளின் அகழ்வாராய்வு முடிவுகளை வைத்து ஓரளவு சரிபார்த்து கொள்ள முடிகிறது. மக்களின் வாழ்நிலையை விரிவாக விவரித்த பின் “கிஷிவாஜின்தென்” அன்றைய அரசியல் சூழ்நிலையை பற்றி விளக்க ஆரம்பிக்கிறது. வா நிலத்தில் முப்பது சிறு நாடுகள் தங்களுக்கும் போரிட்டு கொண்டிருக்கிறது என்கிறது. ஒன்றாம் நூற்றாண்டின் சீன நூல் நூறு நாடுகள் என்றது, மூன்றாம் நூற்றாண்டின் இந்நூல் முப்பது என்கிறது, நூறு நாடுகள் போரிட்டு தங்களுக்குள் தங்களை தொகுத்து முப்பது நாடுகளாக நிலை கொண்டிருக்கிறது. நூறு முப்பது ஆகுமென்றால் அடுத்தது ஒற்றை தலைமை தான்!!.

Discover more from வேடிக்கை பார்ப்பவன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading