ஃபுஜி சான் என்னும் மூதன்னை-4

ஃபுஜி சான் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் இன்று உலகப்புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள். எரிமலையாயினும் வெடித்து 300 வருடங்களுக்கு மேல் ஆவதால் நடந்தே சிகரம் வரை செல்ல முடியும். ஓராண்டில் சராசரியாக இரண்டில் இருந்து மூன்று லட்சம் மலையேறிகள் சிகரத்தை நோக்கி பயணிக்கின்றனர். உலகளவில் 3000 மீட்டருக்கு மேல் உயரமுள்ள பெருமலைகளில் இந்தளவுக்கு மலையேறிகளை கவரும் மலைகள் அநேகமாக வேறு இல்லை என்றே நினைக்கிறேன். இத்தனைக்கும் கோடை காலமான ஜூலையிலிருந்து செப்டம்பர் வரையிலான மூன்று மாதங்களே அனைவரும் மலையேற முடியும். மற்ற காலங்களில் சிகரத்தில் பனிப்புயல்கள் ஏற்படும் என்பதால் மலையேற்ற அனுமதி பெறுவது மிகவும் கடினம்.

புல்லட் ரயில் ஜன்னலில் இருந்து ஃபுஜி சான்

வரலாற்றை பார்க்கும் போது ஜப்பானியர்களுக்கு ஃபுஜி சானின் சிகரம் நோக்கி மலையேறுவது புனித யாத்திரையாக இருந்திருக்கிறது. முதலில் சிகரம் தொட்டவராக அறியப்படுவது “என் நொ கியோஜா” என்னும் பௌத்த துறவி. பொ. ஆ 797 இல் தொகுக்கப்பட்ட “ஷோகு நிஹொங்கி”(Shoku Nihongi) என்னும் அரசவை நாட்குறிப்பு நூலில் “என் நொ கியோஜா” பொ. ஆ 663 இல் ஃபுஜி சானின் சிகரம் வரை ஏறி சென்றதாக குறிப்பு இருக்கிறது. “என் நொ கியோஜா” ஷூகென்டோ என்னும் பௌத்த பிரிவின் தலைவர். அவரை பற்றி நிறைய மாயாஜால தொன்மங்கள் எழுதப்பட்டுள்ளது. ஆகையால் இதுவும் ஒரு தொன்மமாக இருக்கலாம் என்றே நம்பப்படுகிறது. அது மட்டுமில்லாமல் ஏழாம் நூற்றாண்டு ஃபுஜி சான் அடிக்கடி எரி பிழம்புகளை கக்கி கொண்டிருந்த நேரம், சிகரம் வரை ஏறுவது அவ்வளவு எளிதல்ல.

12 ஆம் நூற்றாண்டிற்கு பின் ஃபுஜி சான் மலையேறும் புனித யாத்திரை குறிப்புகள் நிறைய கிடைக்கின்றன. ஞானோதயம் பெறுவதற்கு கடுமையான சாதகம் செய்ய வேண்டுமென ஜப்பானிய பௌத்த மதத்தில் ஒரு நம்பிக்கை உள்ளது. இன்றளவும் ஜப்பானிய மக்களுக்கு இந்த நம்பிக்கை உள்ளது, கடுமையான அக/புற உழைப்பை கோராத ஒரு செயல் அவர்களை திருப்தி படுத்துவதே இல்லை. ஃபுஜி சான் மலையேறுவது கடுமையான உழைப்பை கோருவது, உடலளவில் மட்டுமல்லாமல், மனதளவிலும் உறுதியாக இல்லையென்றால் சிகரம் வரை செல்ல முடியாது. 12 ஆம் நூற்றாண்டில் போர் வீரர்களான சாமுராய்கள் ஆட்சியாளர்களாக தலையெடுக்க ஆரம்பித்திருந்த காலம், வரிகள் வழியாக அரசுக்கு வருமானத்தை பெருக்கும் வழிகளை ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். புனித யாத்திரைகள் வழியாக மக்கள் பயணம் செய்ய ஆரம்பித்ததால் , சுங்கசாவடிகள் , மலை தங்குமிடங்கள், சுமை சுமப்பவர்கள் , கோயில் காணிக்கை என ஒரு தொழில் சுழற்சி உருவாவதை உணர்ந்த அரசு அதை ஊக்குவித்தது. பௌத்த சூத்திரங்களை ஜெபித்து கொண்டே மலையேறும் வழக்கம் இங்கிருந்து ஆரம்பித்து இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

15 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை சீராக நடந்து கொண்டிருந்த புனித யாத்திரைகள், அன்று கூர் கொண்ட உள்நாட்டு போர்களால் சற்று வேகமிழந்தன. ஜப்பானிய வரலாற்றில் போர்க்காலம்(Sengoku period) என்றழைக்கப்பட்ட இக்காலத்தில் சாமுராய்களுக்கு நடுவில் ஒற்றை ஜப்பானை ஆட்சி செய்வதற்கான போட்டி தொடங்கியது. பெரும் உள்நாட்டு போர்களில் மொத்த ஜப்பானும் ரத்த களரியாகி மக்கள் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. பொ. ஆ 1467 இல் மெதுவாக ஆரம்பித்து , நூறு வருடங்களுக்கு மேல் தொடர்ந்து, பொ. ஆ 1603 இல் தொகுகவா இயேயாசு எடோவை(டோக்கியோவின் அன்றைய பெயர்) மையமாக கொண்ட அரசை நிலை நிறுத்துவது வரை இந்த சூழல் தொடர்ந்தது. அதன்பின் 250 வருடங்கள் நிலையான அமைதியான ஆட்சி, இன்று நாம் காணும் ஜப்பானிய பண்பாடு, கலைகள் அனைத்தும் இந்த எடோ காலத்தில்(Edo period) சீர் செய்யபட்டவை தான்.

17 ஆம் நூற்றாண்டில் அமைதி ஆட்சி தொடங்கியபோதும் மக்கள் பயணம் செய்வதற்கு அந்த ஆட்சி நிறைய தடைகளை விதித்தது. நூறு ஆண்டுக்கு பின் வரும் நிலையான ஆட்சி என்பதால், விவசாயம் மற்றும் தொழில்களில் இருந்து வரும் வரி அரசுக்கு அதிகம் தேவைபட்டது. மக்கள் பயணம் என சுற்றி திரிந்தால் விவசாயம் பாதிக்கபடும் என்பதால், தங்கள் நிலத்தை நீங்காத வண்ணம் வரி அமைப்பு மாற்றம் செய்யபட்டது. மக்கள் அவ்வளவு எளிதாக பயணம் செய்ய முடியாது என்பதால் ஆயுதங்களின் நகர்வோ, அரசுக்கு எதிரான புரட்சி படையெடுப்புகளோ எழாமல் தடுக்க முடியுமென அரசு நம்பியது. இச்சூழலில் முன்அனுமதி பெறப்பட்ட புனித யாத்திரைகள் மட்டும் அங்கீகரிக்கப்பட்டது. மக்கள் தங்கள் வாழும் மாகாணத்தில் உள்ள கோவிலுக்கு சென்று யாத்திரை விவரங்களை தெரிவித்து அனுமதி சான்றிதழ் வாங்க வேண்டும், அதை அனைத்து சுங்கங்களிலும் சரிபார்த்த பின்னே தொடர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டார்கள். அதை தொடர்ந்து புனித தல யாத்திரைகள் மெதுவாக வேகம் கொண்டன. ஃபுஜி சானும் புனித தலம் என்பதால் சிகரம் நோக்கிய பயணங்கள் பெருக தொடங்கின.

ஆனாலும் பயணம் என்பது செலவு புடிக்கும் விஷயமென்பதால் ஃபுஜி செல்வது அவ்வளவு எளிதாக இல்லை. இந்த தடையை தகர்த்து எளிய மக்களை ஃபுஜி சான் நோக்கி அனுப்பி வைத்தது 18 ஆம் நூற்றாண்டில் பிரபலமான ஃபுஜிகோ குழுமங்கள். நம்மூரில் இருக்கும் சிட் ஃபண்ட் போன்ற அமைப்பு. ஒரே கிராமத்தில் வாழும் ஒவ்வொருவரும் ஒரு சிறு தொகையை குழுமத்தில் செலுத்துவார்கள் ஒவ்வொரு மாதமும் குலுக்கல் முறையில் ஒருவர் அல்லது ஒரு சிறு குழு தேர்ந்தெடுக்கபட்டு ஒஷி எனப்படும் ஆன்மீக வழிகாட்டி துணையுடன் ஃபுஜி சான் வரை அனுப்பி வைக்க படுவார். எளிய மக்கள் பயணம் செய்ய இவ்வமைப்பு பெரும் உதவியாக இருந்தது. 17 ஆம் நூற்றாண்டில் ஹசேகவா ககுகியோ இவ்வமைப்பை ஆரம்பித்து வைத்தாலும், அன்று கடுமையான பௌத்த மத சடங்குகளை கடைபிடிப்பவர்கள் மட்டுமே யாத்திரை செல்லும் வகையில் அமைக்க பட்டிருந்தது. 18 ஆம் நூற்றாண்டில் ஜிகிகியோ மிரொகு என்பவர் மத சடங்குகளை எடுத்தெறிந்து ஒரு சமத்துவ சமூக அடையாளமாக இவ்வமைப்பை மாற்றினார். டோக்கியோவை சுற்றி மட்டுமே 800க்கும் மேற்பட்ட ஃபுஜிகோ குழுமங்கள் இருந்தாகவும், சராசரியாக 10000 பயணிகளை ஒவ்வொரு வருடமும் மலையேற வைத்ததாகவும் தகவல்.

பனிபடிந்த சிகரம்

இக்காலத்தில் ஃபுஜி சான் மலையேற்றம் ஒரு அலையாக மாறினாலும், பெண்கள் மலையேறுவது தடை செய்யபட்டு இருந்தது. நியோனின் கின்செய்(女人禁制) எனப்படும் இவ்வழக்கம் 12 ஆம் நூற்றாண்டு முதலே இருந்தது. வழிபாடு சம்பந்தபட்ட பல காரியங்களில் பெண்களுக்கு விலக்கு இருந்தது. ஃபுஜி சான் சிகரம் ஒரு புனித குறியீடு என்பதால் மலையேறுவதற்கு பெண்கள் தடை செய்யபட்டனர். அடிவாரத்தில் இருந்து சற்று தூரம் வரை ஏறி அதன்பின் அங்குள்ள சத்திரங்களில் பெண்கள் தங்கி கொள்ள வேண்டும். ஃபுஜி சான் சிகரம் வரை சென்ற முதல் பெண் என்று அறியப்படுபவர் ஆங்கிலேய தூதுவரான சர் ஹாரி பார்க்ஸின்(Sir Harry Parkes) மனைவியான ஃபானி ஹான்னா பார்க்ஸ்(Fanny Hannah Parkes). 1867 இல் ஹான்னா பார்க்ஸ் அவரது கணவர் மற்றுமொரு சிறு குழுவுடன் சிகரம் வரை சென்று மீண்டார். புராதன நம்பிக்கைகள் கொண்ட ஜப்பானிய சமூகத்தில் இது பெரிய சலசலப்பை உருவாக்கி இருக்க வேண்டும், ஆனால் நடந்ததே வேறு. 1867 மெய்ஜி அரசர் தலைமையேற்ற காலம். ஜப்பானிய சமூகம் உலக அளவில் சிறந்து விளங்க ஐரோப்பிய வழியில் நவீனமயமாவதே ஒரே வழி என மெய்ஜி அரசாங்கம் நம்பியது. தேவையற்ற ஆசாரங்களை சமூகத்தில் இருந்து கலையும் முயற்சிகளில் ஒன்றாக 1872 இல் பெண்களை ஒடுக்கி வைத்திருந்த நியோனின் கின்செய்(女人禁制) வழக்கத்தை ரத்து செய்தது. மெய்ஜி அரசாங்கம் இத்தடையை நீக்குவதற்கு ஹான்னா பார்க்ஸ் ஒரு உந்துதலாக இருந்திருக்கிறார்.

இது நடந்து 150 வருடங்கள் கழித்து வரலாற்றை மாற்றியமைக்கும் ஒரு நாட்குறிப்பு கண்டுபிடிக்கபடுகிறது. கோதானி சன்ஷி என்னும் ஃபுஜிகோ குழுமத்தின் வழிகாட்டி ஒருவரின் நாட்குறிப்பு அது. 1982 இல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த நாட்குறிப்பு 1832 இல் தகாயமா தட்சு என்னும் பெண் ஃபுஜி சிகரம் வரை ஏறியதாக பதிவு செய்கிறது. முதலில் இது சாத்தியமே இல்லை என்றும் ககுயா ஹிமேவை போல ஒரு நாட்டுப்புற கதையாகவே இருக்க வேண்டுமென அனைவரும் நம்புகின்றனர். கோதானி சன்ஷி சார்ந்திருந்த ஃபுஜிகோ குழுமம் முற்போக்கான ஒரு குழுமம் என்று தெரியவருகிறது. பின்பு அந்த நாட்குறிப்பிலே 24 வயதான தகாயமா ஒரு ஆணை போல வேடமிட்டே மலையேறினார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தெளிவான ஆய்வுகளுக்கு பிறகு இது உண்மையென அறிவிக்கப்படுகிறது. 2017 வாக்கில் ஜப்பானிய தொலைக்காட்சி நிறுவனங்கள் தகாயமாவை பற்றிய ஆவண படங்களை உருவாக்கி மக்கள் மனதில் அவரை நிலைநிறுத்தினர்.

மேகங்களுக்கு போட்டியாக!!

இரண்டாம் உலகப்போருக்கு பின் ஜப்பான் அசுர வேகத்தில் மீண்டு வந்து கொண்டிருந்த காலத்தில் ஒரு ஆண்டிற்கு 70000 பேர் வரை ஃபுஜி சானின் சிகரம் நோக்கி பயணித்து கொண்டிருந்தனர். இத்தனைக்கும் ஃபுஜி சானின் அடிவாரத்தில் இருந்து சிகரம் வரை சென்று மீண்டு வர இரண்டு நாட்களுக்கு மேலாகும். இதை ஒரு நல்ல சுற்றுலா வாய்ப்பாக பார்த்த அரசு ஃபுஜி சானின் இடையளவு வரை ஒரு சாலையை அமைக்க முடிவு செய்தது. ஃபுஜி சானின் ஐந்தாவது அடுக்ககம் என்று அழைக்கபடுகிற இந்த இடம் 2305 மீட்டரில் உயரத்தில் இருக்கிறது. சாலையை அமைப்பதால் இது ஒரு சுற்றுலா தளமாக மாறி பேருந்துகள் மற்றும் கார்களில் பெருமளவு மக்களை எளிதாக மேலே வரை கொண்டு செல்ல முடியும் என கணக்கு போடபட்டது. ஜப்பான் 1964 இல் ஒலிம்பிக்கை நடத்தியது. உலகத்திற்கு தங்களால் என்னவெல்லாம் முடியுமோ அனைத்தையும் காட்ட வேண்டுமென ஜப்பான் சபதமிட்டு உழைத்து கொண்டிருந்த நேரம். இன்றுள்ள மின்னல் வேக புல்லட் ரயில்கள், விமான நிலயத்தை நகரத்துடன் இணைக்கும் மோனோ ரயில், டோக்கியோ நகரத்திற்கு நடுவே ஓடும் தேசிய நெடுஞ்சாலை என எல்லாம் 1964 இல் ஆரம்பிக்கபட்டவை தான். அதே 1964 இல் ஃபுஜி சானின் ஐந்தாவது அடுக்ககம் வரையிலான சாலையும் திறக்கபட்டது. ஐந்தாவது அடுக்ககத்தில் இருந்து ஏற ஆரம்பித்தால் சிகரம் வரை செல்ல ஏழு மணி நேரங்கள் தான் ஆகும். இந்த சாலை வந்த பின் மலையேற்றம் செல்பவர்கள் சில மடங்குகளாக அதிகரிக்க தொடங்கினர். அதிகபட்சமாக 1970 இல் நான்கு லட்சம் பயணிகள் ஃபுஜி சானில் ஏறியதாக தகவல் உள்ளது.

இந்த சாலை கட்டபட்ட போது ஃபுஜி சானின் புனித தன்மை கேட்டு போகுமெனவும் , சூழலியல் பிரச்சனைகள் வருமெனவும் போராட்டங்கள் நடந்தாலும் அரசாங்கம் மசியவில்லை. இன்று அளவுக்கு அதிகமான சுற்றுலா பயணிகளின் வருகையால் ஃபுஜி சானே திண்டாடி கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஆகையால் இந்த வருடத்திலிருந்து மலையேறுவதற்கு நிறைய கட்டுபாடுகளை அரசு விதித்து இருக்கிறது. எரிமலை ஒன்று புனித தலமாக வழிபடபட்டு அங்கிருந்து சுற்றுலா தலமாக விரிவடைவதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த ஃபுஜி சானின் சிகரம் நோக்கி நானும் இரண்டு முறை மலை ஏறியிருக்கிறேன்.

மேலும்..

Discover more from வேடிக்கை பார்ப்பவன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading