ஃபுஜி சான் சிகரம் வரை ஏற நீங்கள் தேர்ந்த மலையேறியாக இருக்க வேண்டுமென்பதில்லை!! பாறைகளில் கொக்கிகளை அடித்து, கயிற்றில் தொங்கி ஏறி செல்லும் அளவுக்கு கடினமான நிலப்பரப்பு இல்லை. ஏற்றப் பாதைகள், சில இடங்களில் படிகள் என பெரும்பாலும் உங்கள் கால்களையும் தேவைபட்டால் ஒரு கழியையும் வைத்தே சிகரம் வரை ஏறி விட முடியும். சில இடங்களில் எரி பிழம்புகள் இறுகி உருவான மண் மேடுகளில் கைகளை ஊணி ஊர்ந்து செல்ல வேண்டியிருக்கும். குளிர் தாங்க தேவையான ஆடைகள் முக்கியம். பின்பு உயரம் ஏறஏற ஆக்சிஜனின் அளவு குறையுமென்பதால் அதை சமாளிக்க நல்ல மூச்சு திறன் வேண்டும். இவையெல்லாம் புறத்தேவைகள். இது போக நெடுநடைக்கு உங்கள் அகம் தயாராக இருக்க வேண்டும். ஃபுஜி சான் எரிமலை என்பதால் பெரிய அளவில் பசுமை இருக்காது, ஒரு பெரும் பொட்டல் வெளி போன்றே இருக்கும். பாறைகள் இல்லாமல் எங்கும் கருமணல். பசுமையற்ற மணல் வெளிக்கு நடுவில் நடக்கையில் உங்கள் அகம் சோர்வடைந்து “இதெல்லாம் நமக்கு தேவையா” என்ற கேள்வியை எழுப்பி கொண்டே இருக்கும்.
நான் இரு முறை ஃபுஜி சான் சிகரம் நோக்கி பயணித்து இருக்கிறேன். முதல் முறை சிகரம் வரை செல்ல முடியவில்லை ஒன்பதாவது அடுக்ககம் வரை சென்று அதற்கு பின் முடியாமல் திரும்ப வந்து விட்டேன். 2014, ஜப்பான் வந்த அடுத்த வருடத்திலே ஃபுஜி சான் ஏறுவது என்று முடிவெடுத்தோம். ஒன்றாக தங்கியிருந்த இந்திய நண்பர்கள் நான்கு பேரும் எங்களுடன் வேலை செய்யும் ஜப்பானிய நண்பரொருவரும் என ஐந்து பேர் சேர்ந்து செல்வதாக திட்டமிட்டோம். அந்த அனுபவங்களை ஒரு சிறுகதையாக எழுதிய முடியமென்று தோன்றியதால், அந்த சிறுகதையை ஆரம்பித்து இருக்கிறேன். விரைவில் அதை வெளியிடுகிறேன்.
மலையேற்றம் போன்ற ஒரு கடினமான செயலை திட்டமிடும் போது ஒரு இந்திய மனம் அதன் தீவிரத்தன்மையை கருத்தில் கொள்வதை விட தனது உடல் மீதான அசட்டு நம்பிக்கையை வைத்தே திட்டமிடுவதாக எனக்கு தோன்றுவது உண்டு. அதற்கு நேரெதிராக ஜப்பானிய மனம் இதை ஒரு தீவிர செயலாக கருத்தில் கொண்டு செலவு பார்க்காமல் தயார் செய்து கொள்வது எனக்கு மலைப்பாக இருந்தது. இந்த அனுபவங்களை ஃபுஜி சானின் மலையேற்ற நிலக்காட்சிகளுடன் சிறுகதையாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். நிஜ வாழ்வு அனுபவங்கள் சிறிது இருந்தாலும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே.
அதன்பின் 2022 இல் இரண்டாவது ஃபுஜி சான் சிகரத்தை நோக்கி பயணம் செய்தேன். இம்முறை நிச்சயமாக சிகரம் வரை சென்றாக வேண்டும் என்பதால் ஒரு ஜப்பானிய மலையேறி குழுவில் முன்பதிவு செய்து கொண்டேன். ஃபுஜி சான் வரை செல்லும் பஸ்சில் ஆரம்பித்து, மலையேற்றத்திற்கு தேவையான சாதனங்கள், மலை தங்குமிடத்தின் முன்பதிவு, இரவு உணவு என அனைத்தும் உள்ளடங்கிய ஒரு பேக்கேஜ். 30 பேர் ஒன்றாக ஒரு வழிகாட்டியுடன் சிகரம் வரை சென்றோம்.

வழிகாட்டி மிகவும் அனுபவம் உள்ளவர். அனைவரையும் அவரவர் வேகத்தில் விட்டு, தேவையான இடத்தில் மட்டும் வேகப்படுத்தினார். அவ்வப்போது மூச்சு விட சொல்லி நினைவு படுத்தி கொண்டே இருப்பார். அவர் நினைவு படுத்திய பின்னே தெரியும் நம் மூச்சு சீராக இல்லையென. அது போலவே மலையேற்றத்தின் போது செய்யும் இன்னொரு தவறு நிறைய தண்ணீர் குடிப்பது. நான் மூன்று லிட்டர் தண்ணீர் வைத்து இருந்தேன். இவ்வளவு இருந்தால் நீங்கள் குடித்து கொண்டே இருப்பீர்கள், ஒரு லிட்டர் மட்டும் போதும். தேவையென்றால் மேலே வாங்கி கொள்ளலாம் என்றார். அவ்வப்போது தண்ணீர் குடிக்கும் படி அவரே நினைவு படுத்துவார் , அதுவே போதுமானதாக இருந்தது.
அன்று முழுக்க மழை பெய்து கொண்டே இருந்தது. அவர்கள் தந்த மழை கோட் மற்றும் பேண்ட் மிக உதவியாக இருந்தது. கழுத்து , கை மற்றும் கால்களில் பட்டைகளை வைத்து தண்ணீர் உள்ளே செல்ல முடியாமல் அடைத்து கொள்ள முடியும். அதேபோல் அவர்கள் தந்த தண்ணீர் உள்ளே புக முடியாத வாட்டர் புரூப் ஷூ, அடிப்பாகம் மலையேற்றத்திற்கு ஏற்றவாறு வழுக்காதவாறு அமைக்க பட்டிருந்தது.
குறிப்பட்டு சொல்ல வேண்டிய இன்னொன்று அவர்கள் தந்த குளிருக்கான ஜாக்கெட்கள். அந்த குளிருக்கு மிக தடிமனான ஜாக்கெட்கள் வேண்டுமென நினைத்திருந்தேன். ஆனால் அவர்கள் தந்தவை மெல்லிசானவை. முதலில் இது போதப்போவதில்லை குளிர் தின்று கொல்ல போகிறது என்று பயந்தேன். ஆனால அப்படி ஆகவில்லை. முதலில் வெல்வெட்டு துணி போல இருந்த Fleece வகை ஜாக்கெட். அதற்கு மேல் மிகவும் மெல்லிசான Wind Breaker வகை ஜாக்கெட் ,கடும் காற்று இருந்தபோதும் உடம்பில் காற்று ஊடுருவவே இல்லை. இரவு -6 பாகை வரை குளிர் இருந்த போதும் அவையே போதுமானகதாக இருந்தது.
மதியம் இரண்டு மணிக்கு நடக்க ஆரம்பித்தோம். செடிகள் மற்றும் சிறு மரங்கள் அடர்ந்த ஆறாவது அடுக்ககம் செல்ல 45 நிமிடங்களே ஆனது. சில இடங்களில் கீழிறங்குபவர்களுடன் பாதையை பகிர்ந்து கொள்ள வேண்டுமென்பதால் நின்று நின்றே செல்ல முடிந்தது. அதுவும் ஒரு வகையில் நல்லது தான், அந்த நேரங்களில் கால்களை சற்று இளப்பாறி கொள்ள முடியும். கடந்த முறையின் அனுபவத்திலிருந்து இம்முறை உப்பு சத்து மாத்திரைகள் மற்றும் Suppaiman எனப்படும் பிளம்மிலிருந்து செய்யபடும் ஒருவித மிட்டாயும் கொண்டு சென்றிருந்தேன். உப்பில் பிளம்மை ஊறவைத்து பதபடுத்தி செய்யப்பட்ட அந்த மிட்டாய் ஜப்பானிய மலையேறிகளின் ஆதர்சம். வாயில் வைத்ததும் பெருமளவு எச்சில் ஊரச்செய்யும் , ஜப்பானிய ஈரப்பத வானிலைக்கு நாவறட்சி அடிக்கடி ஏற்படும், இந்த மிட்டாய் அது நடக்காமல் பார்த்து கொண்டது. அது போக உப்பு சத்து வியர்வையில் வெளியாகிய உப்பை சமன் செய்தது, இது இருப்பதால் தண்ணீரும் குறைவாகவே தேவைபட்டது.
இன்னொரு ஒரு மணி நேர நடையில் ஏழாவது அடுக்ககம். அங்கு நம்மூர் சாயா விற்று கொண்டிருந்தனர். அசாமில் இருந்து வந்த தேயிலை தூள் என்று விற்பனை செய்பவர் சொல்லிக்கொண்டிருந்தார். குளிருக்கு இதமாக இருந்தது. ஏழாவதில் இருந்து எட்டாவது அடுக்ககம் தான் இருப்பதிலேயே கடினமான பாதை. எரிமலை குழம்புகள் இறுகி கற்பாதை உருவாகி இருந்தது. மேடு பள்ளமான இந்த பாதையில் வெறும் கால்களால் நடப்பது சிரமம். சில இடங்களில் கையை வைத்து ஊர்ந்து செல்ல வேண்டும். அவர்கள் தந்த Trekking Pole இங்கு மிகவும் உதவையாக இருந்தது. அவற்றை ஊனுவதால் கால்களின் சுமை பெரிய அளவில் குறைந்தது.

5:30 மணி அளவில் எட்டாவது அடுக்ககம் சென்றோம். அங்கே சென்ற பின் கீழ் நோக்கி பார்த்தால் கால்களுக்கு கீழ் மேகம் வந்து விட்டிருக்கும். மேகங்கள் ஒரு படுக்கை போல குவிந்து கீழிருக்கும் நிலம் நம் கண்ணுக்கு புலப்படாமல் ஆவதால் ஏதோ மிதந்து கொண்டிருப்பது போல ஒரு உணர்வு ஏற்பட்டது. 3000 இல் இருந்து 3500 மீட்டர் உயரம் இருக்கலாம். இந்த இடமே ஜப்பானின் நிலங்களில் உயரமான இடம் தான். அதுவே சிகரத்தை அடைந்த ஒரு உற்சாகத்தை கொடுத்தது.

அங்கே தான் எங்களது தங்குமிடம். உள்ளே சென்றதும் அவரவருக்கான படுக்கையும் பொருள்கள் வைக்கும் இடமும் காட்டபட்டது. கரே ரைஸ் என்று ஜப்பானியர்கள் விரும்பி சாப்பிடும் சூடான சோறும் குழம்பும் கொடுக்கபட்டது. உணவை உண்ட பின் தூங்கிவிட்டு இரவு இரண்டு மணிக்கு திரும்ப நடக்க ஆரம்பிப்பது திட்டம். அப்பொழுது தான் 4 மணிக்கு சிகரம் சென்று அங்கிருந்து சூரிய உதயத்தை பார்க்க முடியும். சாப்பிட்ட உணவுக்கும் இருந்த உடல் வலிக்கும் , கம்பலியை போர்த்திய உடன் தூங்கி போனேன். இரவு ஒரு மணிக்கு அலாரம் அடித்ததும் எழ மனமில்லாமல் எழுந்து கிளம்பினேன்.

தேவையான அளவு தண்ணீரை வாங்கி கொண்டு திரும்ப நடக்க ஆரம்பித்தோம். இரவு இரண்டு மணி கும்மிருட்டு, பொது விளக்கெல்லாம் இருக்காது, நமது தலையில் ஹெட்லைட் பொருத்தி அந்த வெளிச்சத்தில் தான் நடக்க வேண்டும். ஃபுஜி சான் ஏறும் பெரும்பான்மையானவர்கள் சிகரத்தில் இருந்து சூரிய உதயத்தை பார்க்கவே விருப்பபடுவார்கள் என்பதால் இரவு இரண்டு மணிக்கு அனைவரும் எட்டாவது அடுக்ககத்தில் இருந்து கிளம்பி கொண்டிருப்பார்கள். அதிகளவில் மக்கள் இருப்பதால் வரிசை உருவாகி நின்று நின்றே செல்ல முடியும். அங்கிருந்து சிகரம் வரை செல்ல இரண்டு மணி நேரமாகும்.
மழை நிற்கிற மாதிரி தெரியவில்லை. சுற்றிலும் மேகங்கள். சிகரத்தில் இருந்து சூரிய உதயத்தை சரியாக பார்க்க முடியாது என்று மனதை திடப்படுத்தி கொண்டேன். தட்டு தடுமாறி சிகரம் வரை ஏறி விட்டோம். வழிகாட்டி அனைவரையும் பாராட்டி உற்சாக படுத்தி கொண்டிருந்தார். அங்குள்ள சிகரத்தை குறிக்கும் தூணில் நின்று புகைப்படம் எடுத்து கொண்டோம். இன்னும் 30 நிமிடங்களில் சூரிய உதயம் என வானிலை செயலி காட்டியதால், இங்கு காத்திருப்பதாக முடிவு செய்யபட்டது. அங்கிருந்த கடையில் சூடாக ஒரு சூப் வாங்கி அருந்தி கொண்டேன். பத்து நிமிடத்திற்கு மேல் வெளியே நின்றால் உடல் நடுங்க ஆரம்பித்தது. மழை இன்னுமே நிற்கவில்லை, இங்கிருந்தாலும் சூரிய உதயம் தெரியாது என்பதால் கீழிறங்கலாம் என வழிகாட்டி அனைவரையும் கூட செய்தார். கீழே இறங்க ஆரம்பித்த சற்று நேரத்தில் சூரிய ஒளி தெரிய ஆரம்பித்தது. மேகங்களை ஊடுருவி கீழே காட்சிகளை தெளிவாக்கியது. எரிகளையும் அருகில் உள்ள மலைகளையும் பார்க்க முடிந்தது.
ஏறுவது ஒரு மாறி வேதனை என்றால் இறங்குவது இன்னும் பெரிய வேதனை. இறக்கம் என்பதால் மனம் வேகமாக இறங்க முற்படும் ஆனால் கால்கள் நாம் விழுந்து விடக் கூடாது என்பதால் வேகத்தை மட்டு படுத்தும். ஒவ்வொரு காலடியும் நமது உடல் எடையை முழுதாக தாங்க வேண்டி இருப்பதால் கணுக்கால்கள் வலி பெருகும். இவையெல்லாம் புற வலிகள் , இதை விட வேதனை அளிக்கும் அகவலி ஒன்றுண்டு. மொத்தம் முப்பது வளைந்து நெளிந்த பாதைகளில் இறங்கி கீழே வர வேண்டும். ஒரு கட்டத்தில் இந்த வளைவு நெளிவுகள் பித்து பிடிப்பது போல தோன்றும். முடியவே முடியாத ஒரு சுழற்சியில் சிக்கி கொண்டது போல இருந்தது எனக்கு. Trekking Pole தூக்கி வீசி விட்டு சரிவுகளில் அப்படியே உருண்டு விட வேண்டுமென தோன்றியது.

வேகமாக நடந்ததால் மூன்று மணி நேரத்துக்குள் கீழே வர முடிந்தது. அடிவாரத்தில் சற்று இளைப்பாறிய பின் பஸ்சில் ஏறி ஒன்சென் செல்வது திட்டம். ஒன்சென் என்றால் ஜப்பானிய குளியளறைகள். உடல் இருந்த களைப்புக்கு சூடு தண்ணீர் குளியல் இதமாக இருந்தது. வெந்நீர் உடலின் ஒவ்வொரு தசையும் இறுக்கத்தில் இருந்து விடுவித்தது. அதன்பின் டோக்கியோ விற்கு திரும்ப செல்லும் பஸ் பயணம். ஒரு வளைவில் ஃபுஜி சான் முழுதாக தெரியும். அதற்காக காத்திருந்தேன், முழுதாக தெரிந்த பின் , உன்னை வந்து பார்க்க வைத்து விட்டாய் , நன்றி அன்னையே என வணங்கி கொண்டேன்.
முற்றும்.

