பனிமனிதன் ,ஜெயமோகன்

ஜெ தளத்தில் வெளியான எனது கடிதத்தின் இணைப்பு

அன்பு ஜெ 

நலம் விழைகிறேன். ஜப்பானில் இருந்து முத்து எழுதுகிறேன். எனது 7 வயது மகளுக்கு கதை சொல்வதற்காக பனிமனிதன் நாவல் வாங்கினேன். அதன் வாசிப்பனுபவத்தையும் அவளது எதிர்வினைகளையும் பகிர்ந்து கொள்கிறேன். 

தினமும் உறங்கும் முன் கதை சொல்வது பழக்கம். பெரும்பாலும் மிருகங்களின் எளிய கதைகள் தான். ஒரு முறை வென்முரசுவில் வரும் சிபி மன்னர் , சித்ரகன் என்னும்  பருந்து , பிரபை என்னும் புறாவின்  கதையை சொன்னபோது முழுதாக புரியவில்லை என்றாலும் அந்த கதை அவள் மனதில் நெடுநாட்களாக தங்கியது. சிபி என்ற பெயரை எங்காவது கேட்க நேர்ந்தால் அந்த கதையை ஞாபகம் வைத்து  என்னிடம் குறிப்பிடுவாள். சரி இன்னொரு வென்முரசு கதையை சொல்லி பார்போம் என நீர்க்கோலத்தில் வரும் நளதமயந்தி கதையை சிறு சிறு பகுதிகளாக பல நாட்கள் சொல்லி வந்தேன். எதிர்பாராத விதமாக அவளுக்கு அந்த கதை மிக பிடித்து போனது. நளன் ஒரு மன்னனாக இருந்து பின் குள்ளமான பாகுகனாக மாறியது அவளை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது. தமயந்தி காட்டில் தனியாக விடபட்டபோது “பாவம் பா!!” என வருந்தினாள். அன்னம் ஒரு படிமாக அவளுள் எஞ்சிவிடும் என்றே நினைக்கிறேன். இவை கொடுத்த உந்துதலில் பனிமனிதன் மற்றும் உடையாள் இரு நூல்களையும் வாங்கினேன். எட்டி எனப்படும் பனிமனிதர்களை பற்றி பல காணொளிகளை அவள் பார்த்து இருப்பதால் , பனிமனிதனில் இருந்து ஆரம்பித்தேன். 

நீங்கள் முன்னுரையில் குறிப்பிட்டு இருப்பது போல கதை மிக எளிமையான , குழந்தைகள் எளிதில் படிக்க கூடிய மொழியில் எழுதபட்டு இருந்தது. வேகமாக படித்து செல்ல கூடிய நடை என்பதால் சீக்கிரம் முடித்து விடலாம் என்றே நினைத்தேன் . ஆனால் இந்த நாவலில் வரக்கூடிய அறிவியல் தகவல்களும் சரி, பிரபஞ்சம் பற்றிய பார்வைகளும் சரி படித்தவுடனே கடந்து செல்லக்கூடியவை இல்லை என புரிந்தது.  சில தகவல்கள் நிறைய யோசிக்க வைத்தது , சில கற்பனையின் எல்லைக்கு அப்பால் இருந்தது, ஒரு வித பிரமிப்பு உணர்வுடன் படித்து முடித்தேன். 

பனிமனிதனின் கதை என்றவுடன் ஏதோ சாகச கதை என்று நினைத்து கேட்க தொடங்கினாள். இரண்டாம் நாளுக்கு பிறகு சாகசங்கள் வர போவதில்லை , இது ஒரு பயணக்கதை என்று என்று முடிவு செய்து கொண்டாள். அடுத்து என்ன மாதிரியான  நிலத்தில் பனிமனிதனை தேடப்போகிறார்கள் என கேட்க ஆரம்பித்தாள். உறைபனியில் ஆரம்பித்து, இமையத்தில் உள்ள கடல் ,  சிகப்பு வைரங்கள் படிந்த நிலம், பனிமனிதனின் பசுமை நிலம் வரையிலான நிலக்காட்சிகளின் மாற்றம் அவளுக்கு புதிதாக இருந்தது. 

கதை ஓட்டத்தின் கூடவே வந்தாலும் நடுவில் வரும் பல கருத்துகளை விளக்க சிரமமாக இருந்தது. முக்கியமாக பரிணாம வளர்ச்சி பற்றிய விவரணைகள். நாம் குரங்கில் இருந்து பரிணாமம் அடைந்து இன்றைய உடலில் இருக்கிறோம் என்றதும் “நாம் குரங்கா , நமக்கு வால் இருந்ததா ” என வியந்து போனாள் .மரமேறும் குதிரைகள், நடக்கும் முதலைகள் போன்றவைகளை கேட்டபின் நிலத்திற்கு ஏற்ற வாறு மிருகங்கள் தங்களை மாற்றி கொள்ள முடியுமென புரிந்து கொண்டாள். சிங்கமுகமும் பாம்பு போன்ற உடலும் என்று சொல்ல ஆரம்பித்ததும் சரியாக அது டிராகன் தான் என்று கணித்தாள். இமையமலைக்கு அருகில் டிராகன் இருக்கமுடியும் என்றால் டைனோசரும் என்றோ இங்கு வாழ்ந்திருக்குமென உறுதிப்படுத்தி கொண்டாள். 

மலைகள் குழியாடிகளாக செயல்படும்விதம் ஒரு பெரிய அதிசயம் போல அவளுக்கு பட்டது. பாண்டியனின் உருவம் பெரிதாக ஆவதை விவரித்த போது வியப்பில் அவளது கண்கள் விரிவதை பார்த்தேன். “நம்மளும் அந்த மலைக்கு போய் பார்க்கலாம் பா!!, என் கையை அதுக்கு முன்னாடி வச்சு முடியெல்லாம் மரம் மாறி பெருசா ஆகுரத பாக்கணும் பா!!” என்றாள்.  பனிமனிதர்கள் அந்த பனி மலைகளில் பிம்பங்களாக மாறி அவர்களுக்கு விடை கொடுப்பது அவளுக்கு வியப்பான புது அனுபவமாக இருந்தது.

கதை முடிந்த ஒரு வாரம் கழிந்து என்ன நினைவிருக்கிறது என்று கேட்டேன். முதலில் கிம் கையில் இருக்கும் தங்க தாமரை என்றாள். பின்பு பனி மனிதர்கள் அனைவரும் ஒரே குரலில் பூச்சிகள் போல ஒலியெழுப்புவது. சற்று யோசித்தபின் மலைகளில் பனி மனிதர்கள்  பெரிதாக தெரிவதை எப்படி மறப்பேன் என்றாள். இக்கதையிலிருந்து அவளுள் படிந்து போன காட்சிகள் இவை. இவற்றை விரித்து கொள்ள சிறிதளவு அறிவியல் தேடல் தேவைப்படும், அவற்றை புரிந்து கொள்ள இக்காட்சி படிமங்கள் உதவக்கூடும்.  இன்னும் சற்று வயதானால் இவை தத்துவ தேடலுக்கும் வழி வகுக்கலாம். 

இங்கு ஜப்பானில் எஹோன்(ehon – 絵本) என்றொரு நூல் வகை உண்டு. 絵 என்றால் சித்திரங்கள் 本 என்றால் நூல் என்று பொருள், சித்திர நூல்கள். பெரியவர்கள் வாசிக்க குழந்தைகள் சித்திரங்களை பார்த்து கொண்டே, வாசிப்பதை கேட்பதற்காக உருவாக்க பட்ட நூல்கள். குழந்தைகளுடன் பெற்றோர் பிணைப்பை உருவாக்க இந்த நூல்கள் படிப்பதை இங்குள்ள பள்ளிகள் ஊக்குவிக்கின்றன. பள்ளிகளில் நூல்கள் வாசிக்கும் தன்னார்வ குழுக்கள் ஒரு இயக்கமாக செயல்பட்டு, மாதம் இருமுறை சித்திர நூல்களை அறிமுக படுத்துகின்றனர். எளிமையான நீதி போதனைகள் மட்டுமே இல்லாமல், சரி தவறு என்று எதையும் தரம் பிரிக்காமல், அனுபவங்களுக்கு முக்கியதுவம் கொடுப்பவையாகவும் அங்கிருந்து சிறு தேடல் மூலம் அடுத்த கட்டத்திற்கு நம்மை முன் நகர்த்துபவையாகவும்  இருக்கின்றன. உதாரணமாக “நிஜி”(虹-வானவில்) என்றொரு நூல். வானவில்லை தற்செயலாக பார்க்கும் ஒரு சிறுவன் தன் தந்தையுடன் இணைந்து எவ்வாறு வானவில் உருவாகும் என்று தேடி செல்லும் கதை. வெறும் 30 சொச்ச பக்கங்கள் தான் இருக்கும், கதையின் முடிவில் வானவில் பற்றிய ஒரு அறிமுகமும், அடுத்த கட்ட தேடலுக்கான எண்ணங்களும் மனதில் தொகுக்க பட்டிருக்கும்.    இது போன்ற நூல்களை வாசிக்கும் ஒரு குழந்தை தனது ரசனையை சிறு வயதிலே அறிந்து கொள்ளும், அந்த ரசனையறிதலில் இருந்து தனக்கான ஒரு தனித்தன்மையை உருவாக்கி கொள்ள முடியும். இது போன்ற அகதூண்டல் அனுபவங்களை குழந்தைகளுக்கு தரும் நூல்கள் தமிழில் மிக குறைவு. சிறுவயதில் எனக்கு கிடைத்த குழந்தைகள் நூல்கள் அனைத்தும் நீதி போதனைகள் தான்.

டிஸ்னி , மார்வெல் நிறுவனங்கள் வெளியிடும் திரைப்படங்கள் உலகளவில் புகழ்பெறுகிறது.குறிப்பாக குழந்தைகளையும் , பெரியவர்களையும் ஒருசேர  கவருமாறு அமைக்க படுகிறது.  அவையெல்லாம் பல நிலங்களில் இருந்து திரட்டப்பட்ட நாட்டுப்புற(Folklore) கதைகளே என்பது  வியப்பு. ஐரோப்பிய நாட்டுப்புற கதைகளான Rapunzel,Thor, Cindrella உலக கவனத்தை ஈர்த்தபின் , உலகம் முழுவதும் இது போன்ற கதைகளை தேடி சென்று திரைபடங்களாக்கி கொண்டிருக்கிறார்கள்.  சீனா வின்  Mulan, மத்திய ஆசியாவின் Aladdin, ஹவாய் தீவுகளின் Moana என்று ஒரு சுற்று வந்தபின், இன்று அவர்களின் கவனம் முழுவதும் தென் அமெரிக்க கதைகளில் தான்.   Coco Miguel , Encanto Mirabel என தொடர்ச்சியாக தென் அமெரிக்க தொன்மக்கதைகள் வந்து கொண்டிருகின்றன. இந்நிறுவனங்களின் தேடல் பட்டியலில் இந்திய கதைகள் இருந்தது போலவே தெரியவில்லை. Rudyard Kipling எழுதிய Jungle Book ஓரளவுக்கு புகழ் பெற்றது. அதுவுமே இந்திய ஆன்மாவை பற்றி பேசுகிற ஆழமான படைப்பெல்லாம் இல்லை, வெறும் சாகச கதை என்றளவிலே இருக்கிறது. புகழ்பெற்ற Mirabel , Moana போன்ற கதாபாத்திரங்கள்  தாங்கள் வாழ்ந்த நிலங்களில் இருந்து ஞானத்தை எடுத்தாள்வது போலவும், அதை பார்ப்பவர்களுக்கு இந்த மக்களின் ஆன்மா இது தான் என்பது எளிமையாக புரியும் படியும் வடிவமைக்கபட்டுள்ளது. இன்று பார்த்து நாளை மறந்து போகும் சாகச கதைகளாக இல்லாமல் , பல பேருக்கு உத்வேகத்தை கொடுக்கும் கதைகளாக வெகு நாட்கள் மனதில் பதிந்து விடுபவையாக அமைகிறது. ஜப்பானின் “Captain Tsubasa” அனிமே தான் கால்பந்து விளையாட்டை தொடங்க உத்வேகமாக இருந்தது என உலகம் முழுக்க உள்ள பல கால்பந்து வீரர்கள் அறிவித்திருக்கிறார்கள்.  மூலக்கதைகளில் இருக்கும் தத்துவ ஆழமே இந்த உணர்வை நமக்கு தருகிறது. இன்று பனிமனிதனின் ஆங்கில மொழிபெயர்ப்பும் , படக்கதை வடிவமும் சரியான நேரத்தில் வெளி வந்திருக்கிறது. உலக அரங்கிற்கு கொண்டு செல்ல கூடிய, இந்திய ஆன்மாவை வெளிப்படுத்தும், தத்துவ ஆழம் கொண்ட படைப்பாக பனிமனிதனை நான் பார்க்கிறேன். 

நன்றி 

என்றும் அன்புடன் 

முத்து 

2026/07/28 

Discover more from வேடிக்கை பார்ப்பவன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading