மகாதமா: தோற்றுவாய் – 3

Netherzone, CC BY-SA 4.0, via Wikimedia Commons

பொ. ஆ. மு 300 வரை விவசாயமும் நீர் பாசனமும் இல்லாமல் ஒரு நாகரீகம் இருந்திருக்க முடியுமென்பது பலருக்கு ஆச்சரியமளிக்கும் விஷயமாக இருக்கலாம். சிந்து சமவெளி நாகரீகம் பொ. ஆ. மு 2600 இல் விவசாயம் செய்து வந்ததை பார்க்க முடிகிறது. மெசபடோமியா, எகிப்து, சீன நாகரீகங்கள் அதனினும் பழையவை. விவசாயம் இல்லை என்பதால் கால்நடை வளர்ப்பும் தேவை படவில்லை. வென்முரசு வாசிப்பை வைத்து நமது குதிரை வளர்ப்பும் , தேர் தொழில்நுட்பமும் எவ்வளவு உயர்வானவை என நாம் அறிந்து கொள்ள முடிகிறது. மகாபாரத போரே புதிதாக உருவாகிய மேய்ச்சல் நில அரசுகளின் எழுச்சியால் உருவானவை தான். அப்படியிருக்க குதிரைகள் எல்லாம் மிக பிந்தியே ஜப்பானிற்கு வந்து சேர்ந்திருக்கிறது. ஜோமோன்கள் வேட்டை நாய்களை பயன்படுத்தி இருக்கும் குறிப்பு தவிர வேறு எந்த கால்நடை பற்றிய குறிப்புகளும் இல்லை. ஜப்பான் பொ. ஆ. மு 300 வரை விவசாயம் இல்லாமல் எப்படி சமாளித்தது?

விவசாயம் மானுட சமூகத்திற்கு தேவைபட்டதற்கு பல வகையான காரணங்கள் இருந்தாலும் , ஒட்டுமொத்தமாக தொகுக்கையில் இரு பெரும் காரணங்கள் இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஒன்று கால மாற்றங்களால் ஏற்படும் உணவு பற்றாக்குறை. பொதுவாக வேட்டை சமூகங்கள் உணவு தேடி கிடைத்ததை உண்டு வாழ்ந்து கொள்ளும். ஆனால் வெப்பநிலை மாற்றங்கள், பெரு மழை, பனி போன்றவற்றால் உணவு கிடைக்காமல் போகும் காலங்களில் மானுட உள்ளம் தேடிக் கிடைத்த உணவில் சிறிதளவை சேர்த்து வைத்திருக்கலாமோ என்று யோசிக்கிறது. உணவு பொருள்களை சேர்த்து வைப்பதற்கான தொழில்நுட்பத்தில் இருந்து அதை பயிர் செய்ய முடியுமென உணர்ந்து , அங்கிருந்து விவசாயம் தொடங்கி இருக்காலமென்பது ஒரு பார்வை.

இன்னொரு காரணம், தேடிக் கிடைக்கும் உணவு அனைத்து மக்களுக்கும் பத்தாமல் போவது. வேட்டை சமூகங்கள் ஒரு இடத்தில் அமையும் போது முதலில் உணவு வகைகள் நிறைய கிடைக்கிறது. அவ்வுணவு தரும் ஊட்டச்சத்தால் மக்கள் தொகையும் பெருகுகிறது. காலம் செல்ல செல்ல உணவு குறைந்து பெருகி வந்த மக்களுக்கு அவை பத்தாமல் போய் சிறு பூசல்களை உருவாக்குகிறது. இதனால் உணவை பகிர்ந்துண்ணும் வழக்கம் உருவாகி, இவற்றை நாமே உருவாக்கினால் என்ன என்று மானுட மனம் யோசித்து இருக்க கூடும். இதனாலும் மானுடர்கள் உணவை விளைவிக்க தொடங்கி இருக்காலமென ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

ஜப்பானில் இந்த இரண்டு காரணிகளுமே பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுதியதாக தெரியவில்லை. ஜப்பானின் நில அமைப்பு அவர்களுக்கு பெரிதும் உதவியிருக்கிறது. ஜப்பானின் நிலப்பரப்பு என்பது பசுங்காடுகள் கொண்ட மலைகள், மலைகளிலிருந்து எப்பக்கம் இறங்கினாலும் கடலை நோக்கி செல்லும் சமவெளி. இம்மலைக்காடுகள் ஏராளமான பயறு வகை உணவுகளை அள்ளி அளித்திருக்கிறது. சிவப்பு பயறுகள், முள் முந்திரி, பல வகையான மரக்கொட்டைகள் என ஊட்டசத்து நிறைந்த உணவு வகைகள் எந்த பெரு முயற்சியும் இல்லாமலே கிடைத்து விடுகிறது. விவசாயம் இல்லாவிட்டிலும் மண்பாண்டங்கள் பெருமளவு பயன்படுத்த பட்டிருக்கிறது அகழ்வாராய்வில் தெரிகிறது. இப்பயறு வகைகள் கடிக்க சிரமமானவை என்பதால் அவற்றை மண்பாண்டங்களில் அவித்து சாப்பிட்டிருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

மலைகளில் இருந்து இறங்கும் ஆறுகள் குடி தண்ணீர் பிரச்சனை இல்லாமல் பார்த்து கொள்கிறது. அப்படியே மலைகளில் உணவுகள் தீர்ந்து போனாலும், கடல் வரை சென்றால் போதும், அங்குள்ள மீன்வளம் காப்பாற்றி விடும். ஜப்பானின் நிலப்பரப்பு அகலம் குறைந்த நீளமான நீளம் என்பதால் எங்கிருந்தாலும் அதிகபட்சம் இறுநூறு கிலோமீட்டர் நடந்தால் கடல் வந்து விடும், ஆதி மனிதர்களுக்கு இந்த தூரம் ஒரு பொருட்டாகவே இருந்திருக்காது. கடலோரங்களில் கிடைக்கும் மீன் புடி தூண்டில்களையும் , சிப்பி குவியல்களை வைத்து நாம் இதை புரிந்து கொள்ள முடியும்.

நிலவளம் மிக்க ஜப்பானிய நிலத்தில் ஜோமோன்களின் மக்கள் தொகை தொடர்ச்சியாக உயர்ந்து வந்திருப்பதையும் பார்க்க முடிகிறது. பொ. ஆ. மு 14000 த்தில் இருபதாயிரமாக இருந்த ஜோமோன் மக்கள் தொகை , பொ. ஆ. மு 5000 த்தில் ஒரு லட்சமாக உயர்ந்திருக்கிறது. அதன்பின் பொ. ஆ. மு 3500 த்தில் இரண்டு லட்சமாக உயர்ந்து ஜோமோன்களின் பொற்காலம் ஆரம்பிக்கிறது. இந்த காலத்தில் தான் நாம் சிறந்த வேலைப்பாடுகள் கொண்ட மண்பாண்டங்களை பார்க்க முடிகிறது.குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் பொ. ஆ . மு 3000 ஐ சேர்ந்த நெருப்பெழும் மண்பாண்டம். வாயின் மீது தீயெழுவது போல வேலைப்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. இவை தூக்குவதற்கும் எளிதாக இருந்திருக்க வேண்டும்.

An ornate pottery vessel featuring intricate carvings of serpent-like figures and wavy patterns, showcasing a unique design and an open top.
Netherzone, CC BY-SA 4.0, via Wikimedia Commons

அலைந்து திரியும் வெறும் வேட்டை சமூகங்களாக மட்டுமில்லாமல் சிறு குழுக்களாக ஒற்றை இடத்தில் பள்ள வீடுகளில் வாழும் முறை இந்த காலத்தில் தான் அதிகமாகிறது. வீடுகள், வழிபாடு இடங்கள், சடங்குகளுக்கான பொருள்கள், உணவு பொருள்களை சேர்த்து வைக்கும் கிடங்குகள் என ஒரு பண்பாடு எழுந்து வருகிறது. பொ. ஆ. மு 2500 வரை தொடரும் இந்த பொற்காலத்தில் ஏறத்தாழ மூன்று லட்சம் ஜோமோன்கள் இருந்திருக்கலாமென்று கணிக்க படுகிறது. குறிப்பாக ஹோன்ஷூ தீவின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் மக்கள் அடர்த்தியாக வாழ்ந்திருக்கலாமென கருதப்படுகிறது. இயற்கை வளங்களை வைத்தே ஜோமோன்கள் பசியாற்றி கொள்ள முடிந்ததால், கலை திறன் உள்ளவர்களாக பரிணமித்து வந்திருப்பதை நாம் காண முடிகிறது.

வீடுகள் பள்ளங்களில் கட்டபட்டாலும், உணவு பொருள் கிடங்குகள் மண்ணில் படாத வன்னம் மேலெழுப்பி கட்டப்பட்டுள்ளது.
I, Perezoso, CC BY-SA 3.0, via Wikimedia Commons

பொ. ஆ. மு 2500 இல் இருந்து பொ. ஆ. மு 300 வரை கொஞ்ச கொஞ்சமாக இந்த பொற்காலம் தேய்ந்து , மக்கள் தொகை குறைய தொடங்குகிறது. இக்காலத்தில் கிழக்காசியாவில் ஒரு சிறு பனிக்காலம் உருவாகியதால் வெப்பநிலை குறைந்து மலைக்காடுகளில் உணவு உற்பத்தி பெருமளவு பாதிக்கபடுகிறது. இக்காலத்தில் கிடைக்கும் புதிய வகை மீன்பிடி தூண்டில்களை வைத்து பெரிய அளவிலான மலைவாழ் ஜோமோன்கள் கடலுக்கு அருகிலான நிலங்களுக்கு இடம்பெயர்ந்து இருக்கலாமேன கருதப்படுகிறது. ஆனாலும் அவர்களால் இந்த வெப்ப மாற்றத்தை தாக்குபிடிக்க முடியவில்லை. பொ. ஆ. மு 300 மக்கள் தொகை பாதிக்கு கீழாக குறைந்து என்பதாயிரம் ஜோமோன்களே மீதமிருந்தனர். இயற்கையின் தயவில் கிடைத்த உணவை சேகரித்து மட்டுமே உண்டு வந்த ஜோமோன்களுக்கு உணவை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் தெரியாமல் போனதால் அவர்கள் சுருங்கி போனது இயல்பானதே.

கூப்பிடு தொலைவிலிருக்கும் சீனாவிலும் கொரியாவிலும் இந்நேரம் விவசாயம் செழித்து கொண்டிருக்கிறது. இரும்பு மற்றும் வெண்கலத்தாலான விவசாய கருவிகளை செய்யும் தொழில்நுட்பத்தையும் கையில் வைத்திருக்கும் இவர்களின் அரிசி உற்பத்தி சீராக சென்று கொண்டிருக்கிறது. கப்பல் தொழில்நுட்பமும் கடல் தாண்டி இடம்பெயரும் வழக்கமும் மெதுவாக உயர்ந்து வந்தாலும் சீன நில மக்களுக்கு உள்நாட்டு பிரச்சனைகளை தீர்ப்பதே பெரும் தலை வலியாக உள்ளது. கடல் தாண்டி நிலங்களை பிடிக்க வேண்டுமென்ற எண்ணமோ அதற்கான தேவையோ பொ. ஆ. மு 300 வரை அவர்களுக்கு பெரிதாக இல்லை.

பொ. ஆ. மு 475 முதல் 221 வரை ஒற்றை பேரரசின் கீழ் சீனாவை கொண்டு வர பெரும் போர்கள் நடக்கிறது. நூற்றாண்டுகளை கடந்த இப்போர் சீனாவின் அருகிலிருக்கும் கொரியாவிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக கொரியாவின் வடக்கு பகுதி மக்கள் தெற்கு வரை பரவ ஆரம்பிக்க, தெற்கில் நிம்மதியாக விவசாயம் செய்து கொண்டிருந்த மக்கள் நிம்மதியிழக்க, புதிய நிலங்களை தேட ஆரம்பிக்கின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக ஜப்பானின் கியுஷு தீவின் வடக்கு பகுதியில் கப்பலில் வந்திறங்கி புதிய நிலங்களை பதப்படுத்தி பாசன வசதிகளை ஏற்படுத்தி விவசாயத்தை ஆரம்பிக்கின்றனர். இந்த புது வகை மக்கள் கொமே(அரிசி) எனப்படும் ஒரு உணவுவகையை பயிர்செய்து உண்ணுகிறார்கள் என்ற செய்தி ஜோமோன்களுக்கு ஆச்சரியமளிக்கிறது. இதன்பின் ஜோமோன்கள் புதிதாக வந்த யயோய் மக்களுடன் கொண்டும் கொடுத்தும் வாழ ஆரம்பிக்கின்றனர். யயோய்களின் வரவுக்கு பின் விவசாயம் ஜப்பான் நிலமெங்கும் பரவ ஆரம்பிக்கிறது.

A stone monument with inscriptions, surrounded by a fenced area with several stone pillars, a tree, and buildings in the background.
யயோய் கால மண்பாண்டங்கள் கிடைத்த டோக்கியோவின் யயோய் பகுதியின் நினைவுசின்னம் . Asanagi, CC0, via Wikimedia Commons

யயோய் என்ற பெயர் ஜோமோன்கள் வைத்தது அல்ல. 1884 இல் பொ. ஆ. மு 300 க்கு பிறகு செய்யப்பட்ட மண்பாண்டங்கள் டோக்கியோவின் யயோய் என்னும் பகுதியில் கண்டுபிடிக்கபடுகிறது. இதனால் விவசாயத்தை ஆரம்பித்து வைத்த அம்மக்களுக்கும் அந்த காலக்கட்டத்துக்கும் யயோய் என்ற பெயர் போடப்பட்டது. யயோய் என்ற உச்சரிப்பை குறிக்கும் சித்திர சொற்களில் ஒரு தற்செயலான சுவாரசியம் ஒளிந்திருக்கிறது. யயோய் 弥生 எனப்படும் இரு சித்திர சொற்களால் குறிக்கபடுகிறது. 弥 என்றால் இன்னுமின்னும் என்று பொருள். 生 என்றால் அடிப்படையில் வாழ்தல் என்ற பொருளென்றாலும் முளைத்தல் , பயிரிடுதல் என்றும் ஒரு பொருள் உண்டு. கூட்டினால் இன்னுமின்னும் பயிரிடுதல் என்று பொருள்படும். விவசாயம் செய்து ஜப்பானின் நிலப்பரப்பில் மக்களை சாகாமல் காப்பாற்றிய அம்மூதாதைகளின் மண்பாண்டம் இன்னுமின்னும் பயிரிடுதல் என்ற பொருளுள்ள ஒரு இடத்தில் கிடைக்கப்பெற்று அவர்களுக்கு அந்த பெயரே நிலைப்பது வெறும் தற்செயல் அல்ல என்றே தோன்றுகிறது.

Discover more from வேடிக்கை பார்ப்பவன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading