ஏறத்தாழ பொ. ஆ. மு 300 இல் இருந்து சிறிது சிறிதாக ஜப்பானிற்கு இடம்பெயர்ந்து வரும் யயோய் மக்கள் தாங்கள் கொண்டிருந்த விவசாய தொழில்நுட்பத்தின் ஊடாக ஏற்கனவே இருந்த ஜோமோன் மக்களுடன் உறவாட ஆரம்பிக்கின்றனர். வடக்கு கியுஷுவில் ஆரம்பிக்கும் விவசாயம் இன்றைய டோக்கியோ பகுதி வரை பரவியது. ஒரு லட்சத்துக்கு குறைவாக குறைந்து போன மக்கள் தொகை விவசாய பரவலுக்கு பின் பொ. ஆ. 300 இல் கிட்டதட்ட ஏழு லட்சமாக உயர்ந்திருக்கிறது. பொ. ஆ. மு 300 முதல் பொ. ஆ. 250 வரையிலான இந்த ஆண்டுகள் தான் யயோய் காலகட்டம் என்று அழைக்கபடுகிறது.
ஜோமோன் மக்களை காட்டிலும் யயோய் மக்கள் உடல் கூறுகள் சிறிது மாறுபட்டு இருந்திருக்கிறது. இதை பற்றி ஜெமினி செயற்கை நுண்ணறிவிடம் விசாரித்து கொண்டிருந்த போது அது கொடுத்த சுவாரசியமான வரை படத்தை இங்கு இணைக்கிறேன்.

மேலே குறிப்பிட்டு இருப்பது போல, ஜோமோன்கள் அகண்ட கண்களும் மூக்கும் கொண்டிருந்தனர். யயோய்கள் சற்று சப்பையான முகமும் கீற்று போன்ற குறுகிய கண்களும் கொண்டிருந்ததாக அறியப்படுகின்றனர். ஜோமோன்கள் போல அல்லாமல் யயோய்களின் உடலில் ரோமம் குறைந்து காணபட்டு இருக்கிறது. இன்றைய ஜப்பானியர்கள் இவ்விரு உருவங்களின் கலவைகளாக இருக்கின்றனர். வடக்கு தீவில் உள்ள அய்னு மக்களும், தெற்கில் உள்ள ஒகிநவா தீவின் ரியூகியூ இன மக்களும் ஜோமோன் மக்களின் தோற்றத்தை ஒத்து இருப்பதால், ஆதி ஜோமோன்கள் யயோய்கள் வருகைக்கு பிறகு வடக்கிற்கும் தெற்கிற்கும் இடம் பெயர்ந்திருக்கலாம் என்றும் ஒரு அனுமானம் இருக்கிறது.
ஜோமோன் காலத்தில் இருந்ததை விட யயோய் கால மண்பாண்டங்களில் வேலைப்பாடுகள் குறைவாக காணப்படுகிறது. ஜோமோன் மக்கள் எவ்வித அழுத்தமும் இல்லாத வாழ்க்கை முறையில் இருந்ததால் அவர்களால் அழகியலில் நேரம் செலவிட முடிந்தது. அது மட்டுமில்லாமல் ஜோமோன் கால மண்பாண்டங்கள் சமையலுக்கு பயன்படுத்த பட்டதை விட வழிபாட்டு சடங்குகளுக்கு அதிகம் பயன்படுத்தபட்டது, அங்கு அலங்காரங்கள் ஒரு தேவையாக இருந்திருக்கலாம். யயோய் மக்கள் உழைப்பையும் உற்பத்தியையும் அடிப்படையாக கொண்ட மக்கள் ஆகவே அழகியலை விட பயன்பாட்டுக்கு உகந்தாக இருப்பதே முக்கியம் என நினைத்தனர். யயோய் காலத்தில் நீள கழுத்துடைய பானைகள் , அரிசி சமைக்க தேவையான அகண்ட வாய் கொண்ட பானை என சூழலுக்கு ஏற்றவாறு பயன்படும் பல வகையான மண்பாண்டங்கள் கிடைக்கின்றன.
யயோய்களின் ஆரம்ப காலகட்டத்தில் இரும்பாலான கருவிகள் குறைவாகவே காணப்படுகிறது. இரும்பு தொழில்நுட்பம் தெரிந்திருந்தாலும் உற்பத்தி செலவு பிடிக்கும் காரியமாக இருந்திருக்கலாம். ஆகையால் கற்கள் மற்றும் மரத்தலான கருவிகள் நிறைய பயன்படுத்த பட்டிருக்கிறது. அதில் முக்கியமானது இஷிபோச்சோ(Ishibocho) எனப்படும் கல்லாலான கதிர் அறுக்கும் கருவி. பிற்காலத்தில் உலோகத்தலான கதிர் அரிவாள்கள் உருவாக்கபட்டாலும் தொடக்க காலத்தில் கல்லாளான அரிவாள்களே பயன்படுத்த பட்டிருக்கின்றன. இந்த கல் அரிவாள்கள் அரை வட்ட வடிவத்தில் இரு துளைகளுடன் காணப்படுகிறது. இந்த துளைகளில் ஒரு கயிற்றை கட்டி, அந்த கயிற்றை விரலில் மாட்டி கூர் தீட்டபட்ட கல்லின் பகுதி கீழே வருமாறு பிடித்து கொள்கின்றனர். கையை விட சிரிதளவே அகலமிருக்கும் என்பதால் கதிர்களை அடிவரை வெட்டுவது இல்லை, கதிர்மணிகள் இருக்கும் பகுதியை மட்டும் அந்த கூர் பகுதியில் அழுத்தி அறுத்தெடுத்து இருக்கின்றனர். அறுப்பது என்பதை விட நகம் வெட்டுவது போல கதிர்களை கல்லின் கூரான பகுதியில் வைத்து முறுக்கி பிடுங்கி இருக்கின்றனர்.

யயோய்களின் இன்னொரு சாதனை அவர்களின் பாசன தொழில்நுட்பம். இதுவும் காலம் செல்ல செல்ல முன்னேற்றம் அடைந்து வருவதை பார்க்க முடிகிறது. ஆரம்ப காலங்களில் ஆற்று படுகைகளில் மட்டுமே விவசாயம் செய்து வந்திருகின்றனர். மண்ணில் ஈரத்தன்மை மிஞ்சும் என்பதால் பெரிய அளவில் பாசன அமைப்பு தேவைபடாது. மக்கள் தொகை பெருகி, மானுட உழைப்பு சாத்தியமானபின் கால்வாய்கள் வெட்டுவதும் சிறிய அணைகள் கட்டுவதின் மூலம் தண்ணீரை தேவையான இடங்களுக்கு அவர்களால் கொண்டு செல்ல முடிந்திருக்கிறது. கால்வாய்களில் மரத்தாலான சட்டங்களை வைத்து தண்ணீரின் அளவை கட்டுபடுத்தும் படி செய்திருக்கிறார்கள்.
ஜோமோன்களை போலவே யயோய்களும் இயற்கை வழிபாட்டை தங்களது மெய்யியல் அடையாளமாக கொண்டிருந்திருக்கின்றனர். ஜோமோன்களை விட யயோய்களுக்கு இயற்கையை வழிபட வேண்டிய தேவை அதிகம். நேரத்திற்கு மழை பெய்ய வேண்டும், மழை அதிகம் பெய்து விடவும் கூடாது. ஜோமோன்களின் இயற்கை வழிபாட்டு சடங்குகள் யயோய்கள் காலத்தில் விவசாயம் செழிப்பதற்கான சடங்குகளாக உருமாறி வருவதை நாம் காண முடிகிறது. ஜோமோன்களின் சடங்குகளில் பயன்படுத்தபட்ட டோகு பொம்மைகளை போலவே யயோய்கள் காலத்திலும் ஒரு விந்தையான பொருள் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கபட்டிருக்கிறது.
டோதகு எனப்படும் இப்பொருள் ஒரு பெரிய கோவில் மணி வடிவில் இருக்கிறது. மணி வடிவில் இருந்தாலும் ஒலியெழுப்பும் கோல் இல்லாமல் வெறும் மேற்பகுதி மட்டுமேயான மணி. அந்த மேற்பகுதியும் மிக மெல்லியதாக செய்யப்பட்டிருக்கிறது. இதனால் ஒலியெழுப்புவதற்காக இல்லாமல் இது சடங்குகளுக்காக மட்டுமே பயன் படுத்த பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதை போன்ற வடிவங்கள் கொரிய நிலத்திலும் இருந்ததால் அங்கிருந்து வந்திருக்கலாமேன படுகிறது. இவை தனிபட்ட ஒருவரின் சொத்தாக இல்லாமல் ஒரு சமூகத்தால் பொதுவாக பயன்படுத்த பட்டதற்கான சான்றுகள் கிடைப்பதால் சடங்குகளுக்கான பொருள் தான் என்பது உறுதி. இந்த மணியின் வெளிப்புறம் பல வகையான வடிவங்கள் பொறிக்கபட்டுள்ளது. மான்கள், கொக்குகள், பாம்புகள் , நீரோட்டம், மீன்கள், சடங்குகள் செய்யும் மனிதர்கள் என பல வகையான வடிவங்கள். இந்த வடிவங்கள் கொண்ட வார்ப்புகளும் அகழ்வாராய்வில் கண்டுபிடிக்க படுகிறது. இவ்வடிவங்களின் அழகியல் பற்றிய ஆய்வுகளில் பெரும்பான்மையான வடிவங்கள் ஜோமோன் கால அழகியலை ஒத்து இருப்பதாக கருதப்படுகிறது. கலை என்று வரும் போது அலைந்து திரிந்த ஜோமோன் மனத்தை தான் யயோய்கள் தேடி சென்றிருக்கின்றனர்.
விவசாயம் செழித்து மக்கள் தொகை பெருகி வந்தாலும் பெரிய அளவில் கால்நடை வளர்ப்புக்கான அறிகுறிகள் தென்படவில்லை. உணவு தேவைக்காக பன்றிகளும் கோழிகளும் வளர்க்க பட்டிருக்கிறது. விவசாய நிலங்கள் அளவில் சிறியதாகவும் அங்குள்ள மானுட உழைப்பை வைத்தே சமாளித்து கொள்ளும் அளவுக்கு இருந்திருக்கலாம். இன்றுமே விவசாயத்திற்கான மாடு மற்றும் ஆடு வளர்ப்பு என்பது ஜப்பானில் மிக குறைவு தான். ஜோமோன்களை போலவே யயோய்களும் பள்ள வீடுகளிலே குடியிருந்திருக்கின்றனர். பிற்கால யயோய்களின் குடியிருப்பு தலைவர்களின் வீடுகளும் வழிபாட்டு தளங்களும் நிலத்தில் இருந்து உயரத்தில் அமைக்க பட்டிருக்கிறது.
யயோய்களின் ஈமச்சடங்கு முறைகள் ஜோமோன்களிடம் சற்று மாறுபட்டு இருக்கிறது. ஜோமோன்கள் பெரும்பாலும் சிப்பி குவியல்களில் அடக்கம் செய்யப்பட்டனர். ஆரம்பக்கால யயோய்கள் நம்மூர் முதுமக்கள் தாழி போன்ற நீளுருண்டை வடிவத்தில் உள்ள தாழிகளில் அடக்கம் செய்து அவற்றை மண்ணில் புதைத்து இருக்கின்றனர். பின்னர் புதைத்த இடங்களை சிறிய மணல் மேடுகளால் அடையாள படுத்தும் வழக்கம் யயோய்களிடம் இருந்திருக்கிறது. பல தொல்லியல் தளங்களில் இது போன்ற சிறிய மணல் மேடுகளை காண முடிகிறது. இந்த மணல் மேடுகள் பிற்காலத்தில் கோஃபுன் என அழைக்கபடும் விந்தையான வடிவத்திலுள்ள அடக்க மேடுகளாக பரிணாமம் பெற்றிருக்கிறது.
ஆரம்பத்தில் ஜோமோன் என்னும் மனிதர்கள் இருந்தனர். யயோய் எனப்படும் உணவு உற்பத்தி செய்ய தெரிந்த மனிதர்கள் வந்ததும், அவர்களிடம் போர் செய்து ஜோமோன்கள் அனைவரும் மடிந்தனர். அதன்பின் யயோய்கள் ஜப்பானை ஆண்டனர் என்பது போன்ற வரலாற்று சித்திரமே கட்டமைக்க பட்டிருந்தது. ஆனால் அகழ்வாராய்வில் வெளிய எடுக்கப்படும் பொருள்களை பார்க்கும் போது , இரு குழுக்களும் ஒருவருக்கு ஒருவர் கொண்டும் கொடுத்தும் மேலெழுந்து இருப்பது தெளிவாகிறது. யயோய்களின் பள்ள வீடுகளில் ஆரம்பித்து மண்பாண்டங்கள் வரை ஜோமோன்களின் பாதிப்பு அதிகம். அரிசியே அன்றைய முக்கிய உணவாக இருந்தாலும் யயோய்களும் உணவுக்காக விலங்கு வேட்டை மேற்கொண்டிருந்தனர். யயோய்கள் பயன்படுத்திய வேட்டை ஆயதங்கள் நேரடியாக ஜோமோன்களின் ஆயுதங்களில் இருந்து வந்தது போலவே தெரிகிறது. அதன்பின் வழிபாட்டு முறைகள் , இன்றைய ஷின்டோ மதத்தின் அடிப்படையான இயற்கை வழிபாடு ஜோமோன்களிடமிருந்து நேரடியாக யாயோய்களிடமும் தொடர்ந்து வந்திருக்கிறது.
இந்த இயற்க்கை வழிபாட்டின் தொடர்ச்சியாக இயற்கையை ஆளும் கமி எனப்படும் தெய்வங்களிடம் குறி கேட்டு சொல்லும் குறி சொல்பவர்களும் அதிகரிக்கின்றனர். மானின் எலும்பில் சூடான உலோக ஊசியை செலுத்தி அதிலிருந்து எழும் விரிசல்கள் வழியாக வரும் காலத்தை கணிக்கும் இந்த சடங்கை ஃபுடோமானி என்று ஷின்டோ மதத்தில் அழைக்கின்றனர். இது அனைவராலும் முடியாத செயல் என்பதால் குறி சொல்பவர்கள் சமூகத்தில் உயர்ந்த இடத்தில் வைக்க பட்டிருக்க வேண்டும்.

(Source: Bunka-isan Online)
பிற்காலத்தில் உலோகத்தலான கதிர் அரிவாள்கள் புகழ் பெறுகிறது. ஒரு முழத்துக்கும் குறைவான மர கைப்பிடிகளில் சற்று சாயந்தவாறு உலோகத்தலான அரிவாள் இணைக்கபட்டிருக்கிறது. பிற்கால சாமுராய்கள் பயன்படுத்திய எரி என்கிற ஈட்டி போன்ற ஒரு ஆயுதத்திற்கு இதுவே அடிப்படை. கல் அரிவாள்களை விட இவை அதிகளவு கதிர்களை அறுத்தெடுக்க உதவி இருக்கும். இது போன்ற உபயோகமான கருவிகளை உருவாக்கிய யயோய் மனம், இனி நடக்கவிருக்கும் பூசல்களில் இவை உயிர் கொள்ளும் கருவியாக மாறும் என எதிர்பார்த்திருக்காது.





